வியாழன், 21 மே, 2026
|
அரசியல்

அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளைப் பயன்படுத்துகிறார் சுமந்திரன்: யாழ் பல்கலை விரிவுரையாளர் சாடல்!

அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளைப் பயன்படுத்துகிறார் சுமந்திரன்: யாழ் பல்கலை விரிவுரையாளர் சாடல்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 21, 2026 · 2 நிமிட வாசிப்பு

சுமந்திரன் அரசியல் தேவைகளுக்காக முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பான கருத்துகளைக் கூறுகிறார் என்றும், இது எவ்வளவு காலத்திற்கோ தெரியவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்: "சிறிலங்கா அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், போர்க்குற்றம் தொடர்பான உலகளாவிய விசாரணைகளுக்குக் கால அவகாசம் கோரினார்; புலிகளும் போர்க்குற்றங்கள் புரிந்தார்கள், அவர்களையும் விசாரணை செய்ய வேண்டும்; புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த காலங்களில் கூறினார். ஆனால் தற்போது, தமிழரசுத் கட்சிக்குள் முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும்தான் முன்னுரிமை உள்ளது என்று கூறுகிறார். இது குறித்துத் தங்களது கருத்து என்ன?" என வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டு அரசியல் போல்தான் நாங்கள் இதனைப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மறைந்த தமிழக முதலமைச்சர் செயலலிதா கூறிய, "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்ற கருத்துக்கு ஏற்பவே எமது அரசியல்வாதிகள் தற்போது செயல்படுகிறார்கள் என்பது தனது சுருக்கமான விளக்கம் என்றும், இதில் நிறைய விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். மேற்கூறப்பட்ட கருத்துகளைப் பயன்படுத்திய நபர், தற்போது முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுடன் அரசியல் தேவைக்காக எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

எங்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் வழியை நாங்கள் ஒருவரது கைகளில் கொடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், அந்தச் சட்டத்தரணி கூறிய கருத்துக்களுக்குப் பல்கலைக்கழக சமூகமோ அல்லது முற்போக்கான அமைப்புகளோ எதிரான கருத்துகளைத் தெரிவித்திருக்க வேண்டும் என்றார். அவர் தன்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தனது கருத்துகளைச் சொன்னார்; அதை நாங்கள் ஏற்க வேண்டிய தேவையில்லை எனவும், விரும்பினால் நிராகரிக்கலாம், கட்டாயமாக ஏற்க வேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஆனால் இந்த மண்ணில் என்ன நடந்தது என்பதை நாங்கள் சரியான முறையில் அறிய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், புலிப் போராளிகள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார்களா என்று நாங்கள் சிந்திக்க வேண்டும் என்றார். அவர் அரசியல் தேவைக்காகவே இவ்வாறான கருத்துகளைக் கூறியிருந்தார் என்றும், தற்போது அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது எங்களது அரசியல் களத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றியுள்ளார் போல் தெரிகிறது என்றும், இது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரியவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் மேலும் தெரிவித்தார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.