பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ஆளுநரின் விசாரணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எழுத்தாணை முறையீடுகளையும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், முறையீட்டாளர்களால் பெறப்பட்டிருந்த இடைக்காலத் தடைக் கட்டளையை இரத்துச் செய்த நீதிமன்றம், ஆளுநரின் விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அனுமதியையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 184 ஆம் பிரிவின் கீழ் ஆளுநரின் கட்டளையின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு எதிராகவே இந்த முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பருத்தித்துறை நகர சபையினால் மரக்கறிச் சந்தையை மாற்றுவது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்துவது, ஆளுநர் அல்லது உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தல்களை மீறும் செயலாகக் கருதப்படக் கூடாது எனவும், தவிசாளர் சபையின் முடிவையே கைக்கொள்ள வேண்டும் என்பதால் 184 ஆம் பிரிவின் கீழ் இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது எனவும் முறையீட்டாளர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதிமன்றம் முன்னதாக குறித்த விசாரணைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
வட மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச வழக்குரைஞர் திரு. புவனேந்திரராஜா ஜனந்தன், தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார். இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அனுமதிக்கப்படுவது அரசு இயங்கியலின் செயற்பாட்டை முடக்கும் எனவும், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட்டு முடிவுக்கு வர வேண்டுமே தவிர, விசாரணையை முன்னரே தடுக்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டார். அத்துடன், முறையீட்டாளர் தரப்பு நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாகவும் அவர் தமது ஆட்சேபனையில் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடந்த 08.04.2026 அன்று தனது முகநூலில் வெளியிட்ட பதிவு ஒன்று முக்கிய பேசுபொருளானது. அரச இதழ் அறிவிப்பு அரச இணையத்தளத்தில் வெளியாவதற்கு முன்னதாகவே அதன் ஆங்கிலக் கூகுள் மொழிபெயர்ப்பின் ஒளிப்படத்தை அவர் பதிவிட்டுத் தவிசாளரை ஏளனம் செய்திருந்தமை, இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளதை வெளிப்படுத்துவதாக முறையீட்டாளர் தரப்பு வாதிட்டது. எனினும், அரச இதழ் அறிவிப்புகள் உடனுக்குடன் வெளியாகிவிடும் எனவும், அது பிரசுரிக்கப்பட்ட பின்னரே அவர் பதிவிட்டிருந்தார் எனவும் அரச தரப்பு வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அரச இதழ் வெளிவந்த பின்னரே அப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் முன்னரே அதனை அறிவார் எனக் கூறுவது நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தும் செயல் எனத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இந்தக் கட்டளை தொடர்பில் வாதிட்ட முறையீட்டாளரின் வழக்குரைஞர் கலாநிதி கு.குருபரன், நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை இரத்துச் செய்வதற்காக, மன்றைப் பிழையாக வழிநடத்தினார் என்ற வாதத்தை அரச வழக்குரைஞர் உத்தியாகக் கையாண்டமை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவு அரச இணையத்தில் அரச இதழ் வெளியாவதற்கு முன்னரே இடப்பட்டது என்பதே தமது தொடர்ச்சியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். பருத்தித்துறை நகர சபை தவிசாளரைப் பதவி நீக்க வேண்டும் என்ற அரசியல் தேவை தேசிய மக்கள் சக்திக்கும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனுக்கும் மற்றும் தேசிய மக்கள் சக்தியினால் நியமிக்கப்பட்ட வட மாகாண ஆளுநருக்கும் இருந்தது என்ற முறையீட்டாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்தச் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன என்றும், இதில் நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் வாதிட்டார்.
விசாரணை மேற்கொள்ளும் அலுவலர் ஏற்கனவே முறையீட்டாளருக்கு விசாரணை தொடர்பில் விடயங்களைக் குறிப்பிட்டு, சமூகமளிக்குமாறு கடிதம் அனுப்பியதன் ஊடாக அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், விசாரணை செய்வதற்கான சட்ட முகாந்தரம் இல்லை என்றால் அதனை விசாரணை அலுவலருக்கு முன்பாகவே தொடக்கநிலை ஆட்சேபனையாக முன்வைக்க முடியும் எனவும், அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு முன்னர் நீதிமன்றம் அவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்ள முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார். அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், ஆளுநரின் விசாரணையை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கி இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இது குறித்துப் பரிசீலித்து வரும் முறையீட்டாளர் தரப்பு, விசாரணையின் போது விசாரணை அலுவலரின் முன்னால் தொடக்கநிலைச் சட்ட விடயங்களை எழுப்புவது தொடர்பான சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக வழக்குரைஞர் கு.குருபரன் மேலும் தெரிவித்தார்.