ஞாயிறு, 19 ஏப்ரல், 2026
|
அரசியல்

இலங்கையில் கூட்டாட்சியை வலியுறுத்த வேண்டும்: இந்தியாவிற்குக் கஜேந்திரன் கோரிக்கை!

இலங்கையில் கூட்டாட்சியை வலியுறுத்த வேண்டும்: இந்தியாவிற்குக் கஜேந்திரன் கோரிக்கை!
அ.ரஜீவன்
அ.ரஜீவன்

ஏப்ரல் 19, 2026 · 2 நிமிட வாசிப்பு

இந்திய ஒன்றியம் தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்து, தமிழர்களின் தேசம் மற்றும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தியாகத்தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவூர்தி படுவான்கரையைச் சென்றடைந்த போது அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து ஆற்றிய உரையின் முக்கிய விவரங்கள் வருமாறு:

ஈகம் செய்த தாயின் இலட்சியம்

"அன்னை பூபதியின் நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எமது தேசத்தின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரை ஈகம் செய்ய (தியாகம் செய்ய) முன்வந்த அந்த உயர்ந்த தாயின் இலட்சியம் இன்றும் முழுமையாக நிறைவேறவில்லை.

தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த போதிலும், தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 12 நாள்கள் உணவின்றி உறுதியுடன் போராடினார். எமது தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் கௌரவமான வாழ்விற்காகவே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இந்த இலட்சியப் பயணம் தொடரும் என்பதை இந்த நினைவேந்தல் நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

13 ஆம் திருத்தம் ஓர் அடிமைச் சாசனம்

இந்திய ஒன்றியம் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதாகவே இருந்தது. அதன் அடிப்படையிலேயே இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அன்றைய அரச தலைவர் (ஜனாதிபதி) ஜே.ஆர். ஜெயவர்த்தன அந்த ஒப்பந்தத்தின் அம்சங்களைப் புறந்தள்ளி 13 ஆம் திருத்தச் சட்டத்தைத் திணித்துத் தமிழர்களை அடிமைப்படுத்தும் செயலை முன்னெடுத்தார்.

தமிழர்கள் அந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஓர் அடிமைச் சாசனமாகவே கருதி நிராகரித்தனர். எமது தேசத்தின் இறைமை மற்றும் தன்னாட்சி உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம். அன்னை பூபதி ஈகம் செய்து 38 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஒடுக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறோம்; எங்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.

இந்தியாவின் தார்மீகக் கடமை

எனவே, இந்திய ஒன்றியம் தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாம் கோருகிறோம். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்து, தமிழர்களின் தேசம் மற்றும் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த இந்திய ஒன்றியம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.