தவறான ஆட்சேபனையைத் தாக்கல் செய்தமைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்திற்குச் செலுத்த வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை கட்டளையிட்ட நீதிமன்றம், குறித்த வழக்கைத் தொடர்ந்து நடத்திச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவுகளின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாகச் செயற்பட்டதாகக் கூறி, அப்பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக எம்.ஏ. சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, எந்தவித அடிப்படைகளுமற்று மத்தியக் குழுவின் தீர்மானம் ஏதுமின்றித் தன்னிச்சையாகத் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாகக் குறித்த பிரதேச சபை உறுப்பினர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
இந்த வழக்கில் முன்னிலையான தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், குறித்த வழக்கைத் தாக்கல் செய்ததே தவறு எனத் தமது ஆட்சேபனையை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர். இருதரப்பாலும் எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்தக் கட்டளையில், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் தவறானவை எனக் கூறி அவை தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கைத் தொடர்ந்து நடத்திச் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த ஆட்சேபனையை எழுப்பியதற்கான வழக்குச் செலவாக வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்திற்குத் தலா பத்தாயிரம் ரூபாவை அவர்கள் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.