சனி, 18 ஏப்ரல், 2026
|
அரசியல்

"விடுதலைப் போராட்ட வரலாறு வெறும் பதிவுகளல்ல; அது அடுத்த தலைமுறைக்கான புனித மரபு!" - சிறீதரன்

"விடுதலைப் போராட்ட வரலாறு வெறும் பதிவுகளல்ல; அது அடுத்த தலைமுறைக்கான புனித மரபு!" - சிறீதரன்
அ.ரஜீவன்
அ.ரஜீவன்

ஏப்ரல் 18, 2026 · 2 நிமிட வாசிப்பு

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ‘மலரும் புதுயுகம்’ அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகத்தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் ஆற்றிய உரையின் முக்கிய விவரங்கள் வருமாறு:

சிங்கள மேலாதிக்கச் சிந்தனையும் நில அபகரிப்பும்:

"கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தற்போதைய அரசு, தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்க மிக நுணுக்கமான அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்கின்றது. போர் மௌனிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும், எமது பூர்வீக நில அபகரிப்புகள் ஓயவில்லை. படைத்துறைமயமாக்கல் (இராணுவமயமாக்கல்) ஊடாக எமது நிலங்கள் பறிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதும் இன்றும் தீர்க்கப்படாத வலிகளாகத் தொடர்கின்றன. இதற்குப் பின்னால் இருப்பது மிகத் தெளிவான சிங்கள மேலாதிக்க மனநிலையே ஆகும். தமிழர்களைத் தமக்குச் சமமான குடிமக்களாகக் கருதாது, இழிவான பார்வையுடன் அடக்கி ஒடுக்கும் போக்கையே அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

சதித்திட்டங்களை முறியடித்து அறவழியில் பயணிப்போம்

இத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில்தான், கடந்த 16 ஆண்டுகளில் நாம் அழிந்துபோன நிலையிலிருந்து மீண்டு, அறத்தின் வழியிலான அரசியலை முன்னெடுத்துள்ளோம். எமது கொள்கை மீதான நேர்மையும், மக்களுக்காகத் துணிந்து நிற்கும் குணமுமே இன்று இந்த மண்ணின் மக்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. எமது சமூக மேன்மைக்கான இந்த நகர்வுகளைத் தகர்ப்பதற்குப் புலனாய்வுத் துறையினரும், ஒட்டுக்குழுக்களும் எம்மோடு ஒட்டிக்கொண்டு கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், எத்தகைய சதித்திட்டங்கள் வந்தாலும் தியாக தீபம் திலீபன், தியாகத்தாய் அன்னை பூபதி போன்றோரின் வழியில் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும்.

வரலாற்றைக் கடத்தும் தார்மீகக் கடமை

அன்னை பூபதி இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது உயிரையே ஈகம் செய்து எமக்குக் கற்பித்த உறுதியான கொள்கைத் தெளிவுள்ள விடுதலைக்கான அறைகூவலை, அதே உறுதியுடனும் தேசப்பற்றுடனும் நாம் உலகிற்கு உரக்கச் சொல்வோம். எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது தார்மீகக் கடமையாகும். எமது வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் வரலாற்றுப் பணியை அன்னை பூபதியின் நினைவில் நின்று தொடர்வோம்" என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ், மதகுருமார்கள், மலரும் புதுயுகம் அமையத்தின் உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.