சனி, 18 ஏப்ரல், 2026
|
அரசியல்

இலங்கை வருகின்றார் இந்திய துணைக் குடியரசுத் தலைவர்: மலையக மக்களுக்கு நேசக்கரம்!

இலங்கை வருகின்றார் இந்திய துணைக் குடியரசுத் தலைவர்: மலையக மக்களுக்கு நேசக்கரம்!
அ.ரஜீவன்
அ.ரஜீவன்

ஏப்ரல் 18, 2026 · 2 நிமிட வாசிப்பு

பரந்த அளவிலான தூதரக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்திய ஒன்றியத் துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் ஏப்பிரல் 19 முதல் இரண்டு நாள் அலுவல்முறையான பயணமாக இலங்கை வருகை தருகின்றார். இதன்போது அவர் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், இந்திய வம்சாவளித் (மலையக) தமிழ் மக்களுடனும் கலந்துரையாடவுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள்

இலங்கைக்கான இந்திய ஒன்றியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளபடி, துணைக்குடியரசுத் தலைவரின் பயணத் திட்டத்தில் இலங்கை அரச தலைவர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் அரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடனான சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் குழுக்களின் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடுவார்.

துணைக்குடியரசுத் தலைவரின் வருகை குறித்துச் செய்தி நிறுவனமொன்றிடம் பேசிய இந்திய ஒன்றியத் தூதுவர், "இந்தப் பயணமானது, அலுவல்முறையான தூதரக நகர்வுகளும் அடிமட்ட மக்களுடனான தொடர்பும் இணைந்த ஒரு வலுவான கலவையாக அமையும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் வாழும் சுமார் 1.5 மில்லியன் மலையகத் தமிழர்களை முன்னிறுத்தி நடைபெறும் சமூக வரவேற்பு நிகழ்வொன்றிலும் அவர் பங்கேற்று உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையக மக்களுடனான சந்திப்பும் வீடமைப்புத் திட்டமும்

பயணத்தின் இரண்டாம் நாளில், சி.பி. இராதாகிருஷ்ணன் மலையகத் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் நுவரெலியா பகுதிக்குச் செல்வார். அங்கு இந்திய ஒன்றியத்தின் வீடமைப்புத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளை அவர் பார்வையிடுவார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 4,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன; மேலும் 10,000 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

இந்த வீடுகளில் வாழும் குடும்பங்களுடன் துணைக்குடியரசுத் தலைவர் நேரடியாக உரையாடி, அவர்களின் தேவைகளையும் பட்டறிவுகளையும் கேட்டறியவுள்ளார். "அவர் நேரில் சென்று மக்களுடன் பேசி அவர்களின் அகநிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார். இது இயல்பாகவே மலையகத் தமிழ் சமூகத்துடனான எமது தொடர்பை மேலும் வலுப்படுத்தும்" எனத் தூதுவர் தெரிவித்தார்.

பண்பாட்டுத் தொடர்பும் இருதரப்பு உறவும்

நுவரெலியாவில் உள்ள புகழ்பெற்ற சீதை அம்மன் கோவிலுக்கும் சி.பி. இராதாகிருஷ்ணன் செல்வார். இது இந்தப் பயணத்திற்குப் பண்பாட்டு மற்றும் ஆன்மீகப் பரிமாணத்தைச் சேர்க்கிறது. இந்தப் பயணம் இலங்கையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் உயர்மட்டப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியாகவே இது அமைவதாகவும் தூதுவர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டினார்.

"இந்திய ஒன்றியத்தின் 'அண்டை நாட்டுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கை ஒரு முக்கியப் பங்காளியாக விளங்குகின்றது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களிடையிலான உறவையும் ஆழமாக்கும்" என இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.