தான் எதிர்த்த சட்டத்தின் கீழான சாணக்கியனின் மனு மீதான ஆட்சேபனைகள் - முன்னிலையாகும் சட்டத்தரணிகள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியனால் தமிழ் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகள், எதிர்வரும் மார்ச் 27, 2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
முன்னிலையாகும் சட்டத்தரணிகள்
தமிழ் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல்கள், அரசியல் விமர்சன நிகழ்ச்சிகள் மற்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றை 'தடைசெய்யப்பட்ட கூற்றுக்கள்' என வகைப்படுத்தி, அவற்றை நீக்குமாறு கோரி நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் (Online Safety Act) 24ஆம் பிரிவின் கீழ் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 13ஆம் திகதி இந்த ஆட்சேபனைகள் முன்வைக்கப்படவிருந்த போதிலும், வழக்கு மார்ச் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகவுள்ளனர்.

சட்டத்தை எதிர்த்த சாணக்கியனின் முரண்பட்ட நிலைப்பாடு
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, அதனை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களில் சாணக்கியனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஜனவரி 24 அன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், "நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது; இது மக்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டது. போராட்டம், விமர்சனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் நியாயம் கேட்பது போன்றவை கூட இச்சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்படலாம்" என எச்சரித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில், அவரே அதே சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
23 தனிநபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
ஊடகங்களுக்கு மேலதிகமாக, சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சித்த 23 தனிநபர்களுக்கு எதிராகவும் சாணக்கியன் மற்றுமொரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த 23 பேரில் பெரும்பாலானோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களே என்பது கவனிக்கத்தக்கது. இந்த வழக்கு மார்ச் 25 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், இந்த வழக்கு பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது.
பன்னாட்டு அமைப்புக்களின் இரட்டை நிலைப்பாடும்
நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது சனநாயக வெளிக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனை, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவை ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளன. ஒருவரது தனிப்பட்ட கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதற்காக சிவில் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருந்தும், ஒடுக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சாணக்கியன் கையில் எடுத்துள்ளமை விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அரசியல் விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட அவதூறுகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத சாணக்கியனின் இந்த "இரட்டை நிலைப்பாடு" மற்றும் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறை பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
