வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அலுவலர்களால் இடமாற்ற அவையை மீறி ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டமையைக் கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் வட மாகாண ஆளுநர் பணிமனை முன்பாக இலங்கை ஆசிரியர் பேரவையால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் பேரவையின் செயலர் தீபன் திலீசன், வடமாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முன்னெடுப்பில் தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து ஊழல் கல்வி அலுவலர்களும் ஈடுபட்டு வருவதாகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடினப் பகுதி ஆசிரியர்கள் பழிவாங்கல்
இடமாற்ற அவையை மீறித் தங்களுக்குச் சார்பானவர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு நெருக்கமானவர்களை யாழ்ப்பாணத்திலேயே தொடர்ச்சியாகத் தங்கவைத்துவிட்டு, நீண்டகாலமாகக் கடினப் பகுதிகளில் பணியாற்றிய ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதாக அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத் தீவகம் மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கிலும், தமக்கு இயைபானவர்களை யாழ்ப்பாணத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் 'பணியின் தேவை கருதிய இடமாற்றம்' என்ற போர்வையில் திட்டமிட்ட முறையில் இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். வடக்குக் கல்வியில் ஊழல் புரிந்த பல அலுவலர்கள் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், உயர் பதவிகளை அடைவதற்காகவுமே தேசிய மக்கள் சக்திக்குப் பின்னால் நின்று இந்த முறைகேடான இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் சாடினார்.
ஆளுநரின் செயற்பாடுகள் மீது ஐயம்
இந்த இடமாற்றங்களில் பல பிழைகள் உள்ளமை குறித்து வட மாகாண ஆளுநருக்கு எழுத்துமூலம் இலங்கை ஆசிரியர் பேரவை தெரியப்படுத்திய போதிலும், அவரும் தேசிய மக்கள் சக்தியின் செயல்வரைவை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த இடமாற்றங்களை மேற்கொள்வதற்குத் துணைநிற்பதாகத் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டினார். அண்மையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டபோது, இந்த இடமாற்றங்கள் செய்தே ஆக வேண்டும் என ஆளுநர் முண்டியடித்துக் கொண்டு கூறியமை தமக்குப் பலத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் பிரிவை அழிக்கும் சதி
வெளிமாவட்டங்களுக்கு ஆசிரியப் பங்கீடு தேவை என்பதை ஆசிரியர் பேரவை எப்போதும் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கு எதிராக எப்போதுமே செயற்பட்டதில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், ஒருபோதும் வெளிமாவட்டப் பணி செய்யாத பல ஆசிரியர்கள் அரசியல் மற்றும் உயர் அலுவலர்களின் செல்வாக்குடன் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்க, 'பணியின் தேவை' என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வடக்குக் கல்வியைத் திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகளுக்கு வட மாகாண ஆளுநரும் உடந்தையாக இருப்பதற்கான பல சான்றுகளைத் தாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்தில் மேல்நிலை அறிவியல் பிரிவில் ஆங்கில மொழி மூலமாகக் கற்பிக்கும் ஆசிரியரைப் பாடமே இல்லாத வலயம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்துள்ளமையைக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தின் மேல்நிலை அறிவியல் பிரிவைத் திட்டமிட்டு அழிக்கும் செயல்வரைவே இதன் பின்னணியில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும்
கொட்டும் மழையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆசிரியர்களின் போராட்டம், தமது வேண்டுகோள்கள் உரிய முறையில் ஆராயப்பட்டு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் எச்சரித்தார்.
