செவ்வாய், 12 மே, 2026
|
தினசரி

திருகோணமலை சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்! குற்றச்சாட்டை மறுக்கிறது சங்கம்

திருகோணமலை சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்! குற்றச்சாட்டை மறுக்கிறது சங்கம்
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 12, 2026 · 2 நிமிட வாசிப்பு

திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த நிகழ்வு தொடர்பில், குறித்த வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட விடுதிப் பெண் வைத்தியர் ஒருவரைப் பணி இடைநீக்கம் செய்யச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை

குறித்த பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, அந்த இரண்டு வைத்தியர்களையும் பிரசவ அறைக்கு வருமாறு கோரி வைத்தியசாலையின் விடுதிப் பெண் வைத்தியர் ஆறு முறை தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்திய போதிலும், அவர்கள் அந்த நேரத்தில் அங்கு வரவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதேவேளை, கடமை நேரத்தில் சேவையைப் புறக்கணித்த குறித்த இரண்டு வைத்தியர்களும் அந்த நேரத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் (கருப்பை அறுவை சிகிச்சை) ஒன்றில் ஈடுபட்டிருந்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே சுகாதார அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உத்தரவு

அதன்படி கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், கடமை நேரத்தில் சேவையைப் புறக்கணித்து முறையற்ற விதத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த இரண்டு வைத்தியர்களின் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பில் முறையான ஒழுக்காற்று விசாரணையைச் சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை

இதேவேளை, திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்ற சிசு மரணத்தைத் தொழிற்சங்கப் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தச் சோகமான நிகழ்வுக்கு வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டமே காரணம் எனச் சிலர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவது தொடர்பில் அச்சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தச் சிசு மரணம் தொடர்பில் முறையான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் கொண்ட நிபுணர் குழுவைக் கொண்டு சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சுகாதார அமைச்சிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.