திங்கள், 11 மே, 2026
|
தினசரி

கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்: நிறுவனப் பணிப்பாளர் விளக்கம்!

கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்: நிறுவனப் பணிப்பாளர் விளக்கம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 11, 2026 · 1 நிமிட வாசிப்பு

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் சிவகங்கை கப்பல், சீரற்ற வானிலை காரணமாக நடுக்கடலில் இயந்திரப் பழுதடைந்தது. இது தொடர்பில் குறித்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம். ஜெயசீலன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மோசமான வானிலை காரணமாக நேற்றுமுன்தினம் சிவகங்கை கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்ததாகவும், இச்சூழ்நிலை குறித்துச் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினருக்கும் தாங்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்து உதவியைக் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடுக்கடலில் ஏற்பட்ட இந்தச் சூழ்நிலையில் பயணிகளைப் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் மீட்பதை உறுதிசெய்யும் வகையில், தமது நிறுவனமும் துறைமுக அதிகாரிகளும் இணைந்து இரண்டு பாரிய இயந்திரப் படகுகளை மீட்புப் பணிக்கு அனுப்பி வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் படகுகள் மூலமாகப் பயணிகள் அனைவரும் பத்திரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பயணிகள், கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல் ஆகியன நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பத்திரமாக வந்தடைந்துள்ளதாகவும், யாரும் அச்சப்படும் வகையில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.