புதன், 29 ஏப்ரல், 2026
|
தினசரி

பெண்ணைத் துப்பாக்கியால் மிரட்டிய விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்குப் பிணை!

பெண்ணைத் துப்பாக்கியால் மிரட்டிய விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்குப் பிணை!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 29, 2026 · 2 நிமிட வாசிப்பு

காணித் தகராறு ஒன்றில் பெண் ஒருவரைக் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்றம் இன்று (29) அனுமதித்துள்ளது. அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பிணை நிபந்தனைகள்:

இன்றைய தினம் (புதன்கிழமை) சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து, அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 20 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், எதிர்த்தரப்பினருடன் எவ்விதப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடக் கூடாது என அவருக்குக் கடுமையான நிபந்தனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணுக்கும் பிணை:

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கைப் பரிசீலித்த நீதிவான், அப்பெண்ணையும் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.

நிகழ்வின் பின்னணி:

யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அக்காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வையடுத்து, இளவாலைக் காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கடந்த 27 ஆம் திகதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.