காணித் தகராறு ஒன்றில் பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியமைக்காக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலைக் காவல் துறையினரால் (பொலிஸார்) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதும் துப்பாக்கிப் பறிமுதலும்
இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிச் சர்ச்சையான நிலையில், இன்றைய தினம் (27) வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இளவாலைக் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழ்வின் பின்னணி
யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி குறித்த காணியைத் துப்புரவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சென்றபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அதன் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், அப்பெண்களைத் தன் கையிலிருந்த கைத்துப்பாக்கியைக் காட்டிக் கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார். துப்பாக்கி முனையில் அவர் இவ்வாறு அச்சுறுத்திய காணொளியே வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கொலை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதன்போது, அப்பெண்ணின் ஒரு வயதுக் குழந்தையும் அவருடனேயே இருக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.