காணித் தகராறு ஒன்றில் பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதும் விளக்கமறியலும்
துப்பாக்கி முனையில் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் (27) இளவாலைக் காவல் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். அங்கு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரிடமிருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
நிகழ்வின் பின்னணி
யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், அந்த காணியில் வளர்ந்துள்ள புதர்களைத் துப்புரவு செய்யும் பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பணியாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். இதன்போது அங்கு வந்த குறித்த பெண்ணும் அவரது உறவினர்களும், தமது காணியின் வேலி சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைகலப்பும் கொலை மிரட்டலும்
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறித்த பெண் மீதும் அவரது சகோதரன் மீதும் காலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்பாதுகாப்புக்காக அந்தப் பெண் கல்லினால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண்ணை நோக்கிக் கொலை செய்வேன் என்றும், தலையில் சுடுவேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.
கைதான பெண்ணுக்கும் விளக்கமறியல்
இதற்கிடையே, தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றைய தினமே முன்னிலைப்படுத்திய வேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. எனினும், அப்பெண் ஒரு வயதுக் குழந்தைக்குத் தாய் என்பதாலும், குழந்தைக்குப் பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாலும், குழந்தையைத் தாயுடன் வைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

