வியாழன், 23 ஏப்ரல், 2026
|
தினசரி

$2.5 மில்லியன் டொலர் மாயம்: நிதியமைச்சு மௌனம் காப்பது ஏன்? - ஹர்ஷ டி சில்வா கேள்வி!

$2.5 மில்லியன் டொலர் மாயம்: நிதியமைச்சு மௌனம் காப்பது ஏன்? - ஹர்ஷ டி சில்வா கேள்வி!
அ.ரஜீவன்
அ.ரஜீவன்

ஏப்ரல் 23, 2026 · 2 நிமிட வாசிப்பு

பொது நிதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கே அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, மக்களின் பணம் 2.5 மில்லியன் டொலர் மாயமானது குறித்து நிதியமைச்சும் மத்திய வங்கியும் இதுவரை மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் முன்வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள் வருமாறு:

“இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல; இது குறித்து ஏற்கனவே நாங்கள் எச்சரித்திருந்தோம், இதுவொரு தோல்வி. கடன் முகாமைத்துவப் பிரிவை மத்திய வங்கியிலிருந்து திறைசேரியின் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு (PDMO) மாற்றியபோது, பட்டறிவு (அனுபவம்) வாய்ந்த பணியாளர்களை நியமிக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஒரு நாட்டின் கடனை உலகச் சந்தையில் கையாளுவது என்பது சாதாரண எழுத்தர் வேலை அல்ல” என அவர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடன் வழங்கிய தரப்பிற்கு ஐந்து தவணைகள் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுவதால், தொழில்நுட்ப ரீதியாக இலங்கை கடன் செலுத்தத் தவறிய நாடாக (Default) கருதப்படுமா என்ற சிக்கல் எழுந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

சூதாட்ட ஒழுங்குமுறை, 2025 நான்காம் காலாண்டு நிதிச் செயற்பாடு மற்றும் நிதி - பணவியல் கொள்கை ஒருங்கிணைப்பு தொடர்பான மூன்று தொடர்ச்சியான அரச நிதி பற்றிய குழுவின் (CoPF) கூட்டங்களுக்கு நிதியமைச்சு பங்கேற்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “எனது 15 ஆண்டு கால நாடாளுமன்ற வாழ்க்கையில், நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழுவை இவ்வளவு தூரம் அவமதிப்பதை நான் பார்த்ததில்லை” என்றும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாகத் திறைசேரிச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த நிதி இழப்பு எப்போது, எப்படி நடந்தது என்பது குறித்தும், இதுவரை மௌனம் காப்பது ஏன் என்பது குறித்தும் தனக்கு இன்னும் எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. நாம் எந்தத் தரப்பில் நின்றாலும், இதற்காக ஒன்றிணைந்து பொறுப்பானவர்களைத் தண்டித்து, நமது நாட்டின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். பொது நிதி தொடர்பான பொறுப்புக்கூறல் இலங்கையர்களுக்கு அவசியமானது” என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.