2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குப் படைத்துறைப் (இராணுவப்) புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின் பின்னர் ஒரு சாட்சியின் வீட்டிற்குச் சென்ற படைத்துறைப் புலனாய்வு அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளதுடன், அவரது வீட்டில் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்து வேறொரு சட்ட அமலாக்கப் பிரிவின் மூலம் அவரைக் கைது செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் திலீப பீரிஸ் குற்றம் சாட்டினார்.
2018 வவுணதீவுக் காவல் துறையினர் (பொலிஸ்) கொலை மற்றும் 2019 சாய்ந்தமருது வெடிப்பு நிகழ்வுகள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் என்பது ஒரு பாரிய திட்டமிடப்பட்ட சதி என்று குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இதனை மூடிமறைக்க முன்னதாக எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்படும் என்றும், 2027 ஏப்பிரல் மாதம் வரவுள்ள எட்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு முன்னதாக அனைத்துச் சதிகாரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதவான் இசுரு நெத்திகுமார, “இது ஒரு விளையாட்டு அல்ல” எனக் குறிப்பிட்டதுடன், இந்த விவகாரம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதால் ஐயத்திற்கு (சந்தேகத்திற்கு) இடமின்றி மெய்ப்பிக்கக்கூடிய சான்றுகளை (ஆதாரங்களை) மட்டுமே சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்த போது சுரேஷ் சலே பதவியில் இருக்கவில்லை அல்லது நாட்டில் இருக்கவில்லை என வாதிட்டனர்.
இதனையடுத்துச் சுரேஷ் சலேயை எதிர்வரும் வழக்கு விசாரணை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.