ஞாயிறு, 19 ஏப்ரல், 2026
|
தினசரி

இலங்கையில் உள்ள இசுரேலியப் படைவீரருக்கு எதிராகப் போர்க்குற்றப் புகார்: ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை நடவடிக்கை!

இலங்கையில் உள்ள இசுரேலியப் படைவீரருக்கு எதிராகப் போர்க்குற்றப் புகார்: ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை நடவடிக்கை!
அ.ரஜீவன்
அ.ரஜீவன்

ஏப்ரல் 19, 2026 · 1 நிமிட வாசிப்பு

காசாவில் போர் முடிந்து தற்போது இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ள இசுரேலிய-அமெரிக்க முன்னாள் படைவீரர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, மனித உரிமைகள் அமைப்பான 'ஹிந்த் ரஜாப்' (Hind Rajab) அறக்கட்டளை இலங்கை அரசைக் கோரியுள்ளது.

யார் இந்தப் படைவீரர்?

சேக் பர்கன்சு (Jake Burkons) என்ற அமெரிக்க-இசுரேலிய இரட்டைக் குடியுரிமை கொண்ட முன்னாள் படைவீரருக்கு எதிராகவே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் இசுரேலியப் படையின் 603 ஆவது போர்ப் பொறியியல் படைப்பிரிவில் (603rd Combat Engineering Battalion) பணியாற்றியவர் ஆவார். காசாவின் கான் யூனிசு (Khan Younis) பகுதியில் 2025 அக்டோபர் - நவம்பர் காலப்பகுதியில், பொதுமக்களின் குடியிருப்புகளைச் சட்டத்திற்குப் புறம்பாக வெடிவைத்துத் தகர்த்ததில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அறக்கட்டளை குற்றம் சாட்டியுள்ளது.

முன்வைக்கப்படும் சான்றுகள்

குறித்த படைவீரர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அறக்கட்டளை சான்றுகளாகச் சமர்ப்பித்துள்ளது. ஒரு நிழற்படத்தில், தகர்க்கப்பட்ட கட்டடத்திற்குள் வெடிமருந்து இணைப்புக் கம்பியை அவர் வைத்திருப்பது போன்ற காட்சிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

பன்னாட்டு மனிதநேயச் சட்டங்களின்படி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐயப்படும் நபர்கள் ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும்போது, அந்த நாடு அவர்கள் மீது புலனாய்வு (விசாரணை) நடத்திச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. எனவே, இலங்கையில் தங்கியுள்ள இந்தப் படைவீரர் தொடர்பில் புலனாய்வுகளை முன்னெடுக்குமாறு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

பின்னணி

இந்த அறக்கட்டளை, 2024 சனவரியில் காசாவில் இசுரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட 6 வயதுச் சிறுமி ஹிந்த் ரஜாப் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இசுரேலியப் படைவீரர்களின் சமூக வலைத்தளப் பதிவுகளைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராகப் போர்க்குற்றப் புகார்களைப் பதிவு செய்யும் பணியை இந்த அமைப்பு உலகளாவிய மட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளிடமிருந்து இதுவரை அலுவல்முறையாக (உத்தியோகபூர்வமாக) எவ்விதப் பதிலும் வழங்கப்படவில்லை.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.