உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் புலனாய்வு: துணைப் பாதுகாப்பு அமைச்சரைப் பதவி நீக்கக் கோரிக்கை!
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தொடர்பில் சார்பற்ற புலனாய்வை (விசாரணையை) உறுதிப்படுத்துவதற்காக, தற்போதைய துணைப் பாதுகாப்பு அமைச்சர் அருண செயசேகரவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அரசிடம் அருட்தந்தை ரோகன் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமூகம் மற்றும் சமயத்துக்கான நடுவம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து "நினைவின் வலியும் நம்பிக்கையும்: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதியைத் தேடுதல்" எனும் தலைப்பிலான சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“தாக்குதல்கள் குறித்த புலனாய்வுகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நேர்மறையான திசையில் நகர்வது போல் தோன்றினாலும், சிக்கலுக்குரிய சாய்ந்தமருது நிகழ்வுகளின் போது கிழக்கு மாகாணப் படைத்தளபதியாகப் பணியாற்றிய தற்போதைய துணைப் பாதுகாப்பு அமைச்சர் அருண செயசேகரா, இந்தப் புலனாய்வுகள் முழுமையாக முடியும் வரை அப்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் நேர்மையான மற்றும் சார்பற்ற புலனாய்வுக்குத் தேவையான சூழலை உறுதிப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.