நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் திடீர் பதவி விலகல்!
எரிசக்தி அமைச்சர் குமார செயக்கொடி தனது அமைச்சர் பதவியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கைவிட்டுள்ளார் (பதவி விலகியுள்ளார்). இது தொடர்பான அலுவல்முறையான கடிதத்தை அவர் அரச தலைவர் அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
புலனாய்வுகளுக்கு ஒத்துழைப்பு
நிலக்கரி கொள்வனவு தொடர்பான தற்போதைய புலனாய்வுகள் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிகள் குறித்து ஆராய அரச தலைவரின் புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சார்பற்ற புலனாய்வு
நடைபெறவுள்ள புலனாய்வுகள் எவ்விதத் தாக்கமும் இன்றிச் சார்பற்ற முறையில் நடப்பதை உறுதி செய்வதற்காகவே தான் பதவியை விட்டு விலகுவதாகவும், அப்புலனாய்வின் முடிவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் கொள்கைக்கு ஆதரவு
அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்குத் தான் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ள அவர், புலனாய்வுகளின் மூலம் உண்மை வெளிவரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, நாடாளுமன்றத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளரும் பதவி விலகல்
இதேவேளை, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஏமபாலவும் இன்று (17) தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவரிடம் சமர்ப்பித்துள்ளார். வரவிருக்கும் புலனாய்வுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், அவற்றிற்கு எவ்விதத் தடையுமின்றி ஒத்துழைக்கவும் தானும் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மற்றும் செயலாளரின் பதவி விலகல் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமையை அரச தலைவரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.