மட்டக்களப்புக் கொலைப் பின்னணியில் அடுத்த அதிர்ச்சி: புதைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்பு! மேலும் ஒருவர் கைது
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்துப் பெண்களைக் கடத்தி, தங்க நகைகளைக் கொள்ளையிட்டுக் கிணற்றில் வீசிக் கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புடைய மற்றொருவரும் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 அகவையுடைய மூன்று சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26 ஆம் நாள்) இரவு, மயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் தெளிப்பானுடன் (Spray) கைது செய்துள்ளதாகவும், இக்கொள்ளை நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த, அறுவை மருத்துவத்தின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள், தெளிப்பான் மற்றும் குளிகைகள் (மாத்திரைகள்) என்பவற்றை மீட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் நாள் கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, வவுணதீவு கொத்தியாவலப் பகுதியைச் சேர்ந்த 26 அகவையுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கூறப்பட்ட மற்றொரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டன. மேலும், அந்த இளம் தாயின் 3 அகவை நிரம்பிய சிறுமி வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்நிகழ்வு தொடர்பாகக் கிழக்கு மாகாணக் காவல் துறைத் துணைத் தலைவர் (பிரதிப் பொலிஸ் மா அதிபர்) வழக்குரைஞர் வர்ண செயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் லலித் லீலாரெத்தினவின் நேரடிக் கண்காணிப்பில், கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரி தலைமையிலான காவல் குழுவினர் அதிரடிப் புலனாய்வை முன்னெடுத்தனர்.
இதன்போது, வவுணதீவுக் காவல் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடாப் பகுதியைச் சேர்ந்த 26 அகவையுடைய பெண், அவரது 34 அகவையுடைய கணவர், அவரது 22 அகவையுடைய தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் உட்பட 5 பேரைக் காவல்துறையினர் 24 மணிநேரத்தில் கைது செய்தனர். அத்துடன் இரு மூன்று சக்கர வண்டிகள், ஒரு மகிழுந்து (கார்), கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களையும் மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களைக் கடந்த 2 ஆம் நாள் மட்டக்களப்பு நீதிபதி நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியபோது, நகைக்கடை உரிமையாளர்கள் இருவரையும் 27 ஆம் நாள் வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும், கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் 72 மணிநேரக் காவல் துறைத் தடுப்பில் வைத்துப் புலனாய்வு செய்வதற்கும் நீதிபதி ஆணையிட்டார்.
இந்நிலையில், கிழக்கு மாகாணக் காவல் துறைத் துணைத் தலைவரின் நேரடி வழிகாட்டலில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் புலனாய்வுகளின் போது பல தகவல்கள் வெளிவந்தன. கொள்ளையர்களின் காஞ்சிரங்குடா வீட்டின் நிலப்பகுதியில் மயக்க மருந்துகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூன்று சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரிடம் மயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளதாகவும், வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடமிருந்து இந்த மயக்க மருந்தைப் பல ஆயிரம் உரூபாய் பணம் செலுத்திப் பெற்றுக்கொண்டதாகவும் புலனாய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரங்குடா வீட்டை முற்றுகையிட்டு, நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக நெகிழிப் (Polythene) பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த, மருத்துவமனைகளில் அறுவை மருத்துவத்தின் போது பயன்படுத்தப்படும் 6 மயக்க மருந்துப் புட்டிகள் மற்றும் மயக்கக் குளிகைகள் மீட்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றையும் முற்றுகையிட்டு 37 அகவையுடைய மூன்று சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த, கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத் தெளிப்பான் புட்டி ஒன்றையும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய மூன்று சக்கர வண்டி ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இக்குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.