மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி நகைப் பறிப்பு : சந்தேகநபர்களின் பகட்டான வாழ்க்கை !
மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றிக் கடத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட புலனாய்வில் பல புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம்பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல புதிர்கள் வெளிக்கொணரப்பட்டன. அதே கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டது. இந்நிகழ்வுகள் தொடர்பான புலனாய்வுகள் தொடங்கப்பட்ட நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் செய்த பல குற்றச் செயல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஊர்திகள் அனைத்தும், தவணை முறைச் செலுத்துகையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த ஊர்திகளை வாங்குவதற்கான முன்பணத்தை, தாங்கள் திருடிய தங்க நகைகளை விற்றுச் செலுத்தியுள்ளதாகப் புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய பத்தொன்பது சவரன் தங்க நகைகளைத் திருடிய இவர்கள், அதனை ஐம்பது நூறாயிரம் ரூபாய்க்கு (50 இலட்சம்) விற்றுள்ளனர். முதற்கட்டமாக, நகைகளை ஈடு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில், நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, கைது செய்யப்பட்டவர்களில் மூன்று முதன்மைக் குற்றவாளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இரு நகைக்கடை உரிமையாளர்களும் வருகின்ற 27 ஆம் நாள் வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக்குற்றச் செயல்கள் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்தும் தற்போது புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது. கைதானவர்களின் உறவினர்கள் சிலர் எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் பெரும் உடைமைகளைச் சேர்த்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இத்தகைய உடைமைகளை வாங்குவதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் இக்குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்துப் புலனாய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணச் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு அதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் இத்தீவிரப் புலனாய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.