வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுக்கெனப் பண்பாட்டு நோக்கில் எந்தவொரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்களப் புத்த மதப் பேரினவாதத்தின் எண்ணமே, யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்குள் புத்த சாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு முதன்மையான காரணி என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் 15.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அறக்கட்டளை நிதியமும் அரசின் தலையீடும்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய ஒன்றியத்தின் பொருளுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைபொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்குப் புத்த சாசன, சமய மற்றும் பண்பாட்டு விவகார அமைச்சர் முன்வைத்துள்ள முன்மொழிவுக்குக் கடந்த திங்கட்கிழமை (11.05.2026) அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் கட்டப்படும்போது, அதனை அமைத்து யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்திற்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு ஏற்பவே அமைக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியத் தூதரகத்தின் தலையீடும் கடந்த கால அழுத்தங்களும்
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம் அதன் பேணுகைச் செலவுகள் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த நிலையில், இந்தியத் தூதரகம் தலையீடு செய்து சில காலங்களுக்கு அதனைப் பேணித் தருவதற்கான உறுதிமொழியின் அடிப்படையில் அது தற்போது பேணப்பட்டு வருகிறது. இவ்வாறான ஒரு நிலையில், கடந்த அரசு ஒன்றில் குறித்த பண்பாட்டு அரங்கத்தின் பேணுகைச் செலவுகளைத் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்கும் எனவும், அதனைத் தமது கண்காணிப்பின் கீழ் வழங்குமாறும் கோரியது. அதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் இந்தியத் தூதரகத்திற்கு விடுத்த அழுத்தத்தின் கரணியமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களுக்கென அடையாளமாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு அரங்கினைப் புத்த சாசன அமைச்சின் நம்பிக்கைபொறுப்பு அவைக்குள் உள்வாங்கியமை மாபெரும் ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள்
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் சமய அடையாளங்களை அழிப்பதற்கும், திரிபுபடுத்துவதற்கும் முதன்மையான கருவியாக விளங்குகின்ற புத்த சாசன அமைச்சைத் திருவள்ளுவர் பண்பாட்டு அரங்க நம்பிக்கைபொறுப்பு அவைக்குள் உள்வாங்கியமை திட்டமிட்ட தமிழின அழிப்பாகும் என அவர் கடுமையாகச் சாடினார். புத்த சாசன அமைச்சின் கீழ் வருகின்ற தொல்லியல் திணைக்களம், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் புத்த மத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வரும் அமைப்பாகும். எடுத்துக்காட்டாகக் கூறின், படையினரின் துணையுடன் தையிட்டியில் தனியார் நிலத்திற்குள் திட்டமிட்டுப் புத்த மதக் கட்டுமானத்தை அமைத்தது மட்டுமல்லாமல், இன்று வரை அதனை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைப் புத்த சாசன அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்
தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கோ அல்லது புத்த சமயத்துக்கோ எதிரானவர்கள் அல்லர்; ஆனால், திட்டமிட்ட சிங்கள மற்றும் புத்தமயமாக்கல்களை மட்டுமே எதிர்ப்பவர்கள் என அவர் தெளிவுபடுத்தினார். சிங்கள மக்கள் வடக்கில் வசிக்கத் தகுதியற்றவர்கள் எனத் தாங்கள் கூற வரவில்லை எனவும், தமிழ் மக்களின் நிலங்களை அத்துமீறிப் பிடித்துக் குடியேறுவதையே தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எமது முறையான வேண்டுகோள்களை விளங்கிக்கொள்ளாத சிங்களப் பௌத்த பேரினவாதம் தங்களையும் தமிழ் இனவாதிகளாகச் சித்தரிக்கிறது எனவும், அதைப் பற்றித் தாங்கள் கவலைப்படப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாது
இன்று நேற்று அல்ல, இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைத் தட்டிக் கேட்பவர்களைத் தெற்கு இனவாதிகள் என முத்திரை குத்துவதே வரலாறு என அவர் விமர்சித்தார். தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்; தெற்கில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் அவர்களின் ஆட்சியில் பௌத்த சிங்களக் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அவர் எச்சரித்தார். மக்கள் விடுதலை முன்னணியாகத் தமிழின அழிப்பில் பங்கெடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும், கடந்த கால அரசுகளை விட மோசமான முறையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே, யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்க்கப்பட்டமை, தமிழ் மக்களுக்கெனத் தனியான பண்பாட்டு அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சிந்தனையே அடிப்படை எனவும், இதன்பொருட்டுத் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.