திங்கள், 11 மே, 2026
|
தாயகம்

மே 18ஐ இனவழிப்பு நாளாகத் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றுக: முதலமைச்சர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை!

மே 18ஐ இனவழிப்பு நாளாகத் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றுக: முதலமைச்சர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 11, 2026 · 2 நிமிட வாசிப்பு

சிறிலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்புக்குச் சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில், மே 18 ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் தீர்மானமாக நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு நேற்று (10.05.2026) ஈழத் தமிழ் மக்களின் சார்பாகவும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பாகவும் அவர் சிறப்புக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

  • வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துகள்: நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதற்தடவையிலேயே பாரிய சாதனையை நிலைநாட்டி, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளமைக்குத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பாகத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போதைய பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையைக் கவனத்திற் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18 ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ப் பிரகடனம் செய்து, முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • 2013 சட்டசபைத் தீர்மானம்: ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன், ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது 'இனவழிப்பு' என்றும், அதற்குச் 'சர்வதேச குற்றவியல் விசாரணை' அவசியம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

  • புதிய அரசிடம் எதிர்பார்ப்பு: அந்நேரத்தில் 'தமிழக வெற்றிக் கழகம்' தோற்றம் பெற்றிருக்கவில்லை என்றாலும், தற்போது பெரு வெற்றியீட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தாங்களும், தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும், ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பே என்ற நிலைப்பாட்டில் மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • ஆரம்ப அமர்விலேயே தீர்மானம்: ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை அனைத்துத் தரப்புகளுக்கும் உணர்த்தும் வகையில், 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்த ஒரு தீர்மானத்தை, இம்மாதம் கூடவுள்ள தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தங்களது தலைமையில் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு நீதி கேட்டுப் போராடும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் வலுச் சேர்ப்பதாக அமைவதுடன், உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் இதயங்களில் உங்களுக்கு நீங்காத ஓர் இடத்தை வழங்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.