எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவளித்து, எமது இனம் தங்களது ஆட்சிக் காலத்தில் விடுதலை பெற்றிடச் சகல ஆதரவுகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிறப்பு வாழ்த்துக் கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டை நீண்டகாலமாக ஆட்சி செய்த அரசியல் கட்சிகளுக்கு மாற்றாகத் 'தமிழக வெற்றிக் கழகத்தை' ஆரம்பித்து, மூன்று வருடக் காலத்திற்குள் அரசியல் அரங்கில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தையும் முறியடித்து முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு அக்கட்சி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த மாற்றத்திற்கான பயணத்தில் அவர் காட்டிய கொள்கை உறுதிப்பாடும் பொறுமையும் வியக்கத்தக்கது எனவும், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆசனப் பெரும்பான்மையை நிரூபித்து, அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை மாற்றியமைத்தமை ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஓர் இனமாகவே இலங்கைத் தமிழர்களாகிய நாம் இந்த நாட்டில் வாழ்ந்து வருவதைத் தமிழக முதலமைச்சர் நன்கு அறிவார் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்டவாறு வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த எமது தாயகத்தில் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் நிலவுரிமை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலான கூட்டாட்சி (சமஷ்டி) முறையிலான அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டே நாம் தொடர்ந்து போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து, எமது இனம் தங்கள் காலத்தில் விடுதலை பெற்றிடச் சகல ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாகத் தெரிவித்துள்ள அக்கட்சி, தமிழக முதலமைச்சர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழகமும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அரசாகச் செயற்படப் பிரார்த்தித்து வாழ்த்துவதாகவும் அந்தச் சிறப்புக் கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளது.