ஞாயிறு, 10 மே, 2026
|
தாயகம்

"நினைவுகளே எங்கள் பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எங்கள் பலம்" - தமிழ் சிவில் சமூக அமையம்!

"நினைவுகளே எங்கள் பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எங்கள் பலம்" - தமிழ் சிவில் சமூக அமையம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 10, 2026 · 2 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தமிழ் மக்கள் தங்களது தமிழ்த் தேசிய உணர்வையும், கடந்த கால வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது எனத் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தியுள்ளது.

"நினைவுகளே எங்கள் பேராயுதம், தமிழ்த் தேசிய உணர்வே எங்கள் பலம்" எனும் தலைப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான பொ.ந. சிங்கம், விஜயகுமார் மற்றும் கு. குருபரன் ஆகியோரின் கையொப்பத்துடன் 08.05.2026 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

அடையாள இழப்பே எமது இறுதித் தோல்வி:

சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இறுதி இலக்கானது, தமிழ் மக்களிடையே ஆழமாக வேரோடியுள்ள தமிழ்த் தேசிய உணர்வை அழித்து, 'இலங்கையர்கள்' என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தமிழர்களைக் கரைத்து அடையாளமற்றவர்களாக மாற்றுவதேயாகும். நாம் எதிர்கொண்ட இன அழிப்பு வரலாற்றை நாமே மறந்துபோய், அந்த அவலங்களை எமக்குத் தந்தவர்களையே தலைவர்களாக ஏற்கும் நிலை வரும்போதும், எமது பாதுகாப்பரணாகத் திகழும் தமிழ்த் தேசிய உணர்வை இழக்கும் போதுமே தமிழ் மக்களின் இறுதித் தோல்வி நிகழும் என்பதை நாம் ஆழமாக மனங்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசும் தேர்தல் முடிவுகளும்:

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும், தற்போதைய அரசால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வித முற்போக்கான நடவடிக்கைகளோ, இன அழிப்பிற்கான பரிகார நீதியோ வழங்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) அதிக வாக்குகளைப் பெற்றமை, தமிழ்த் தேசிய உணர்வில் ஏற்பட்ட ஒரு சறுக்கலாகும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குக் காரணமாகச் செயற்பட்ட ஜே.வி.பி (JVP) யினர் இன்று என்.பி.பி (NPP) என்ற முகமூடியுடன் வந்தபோது ஒரு தரப்புத் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய வாக்குகளை வைத்து, தமிழர்கள் தமது தேசிய நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டார்கள் எனப் பேரினவாதம் தப்புக் கணக்குப் போடுகிறது.

நினைவேந்தல் வாரச் செயற்பாடுகள்:

எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் காலம் வரை, இந்த மே மாத நினைவு நாள்களை எங்கள் தேசிய உணர்வுகளைப் புடம்போடும் நாள்களாகவும், அடுத்த சந்ததிக்கு வரலாற்றைக் கடத்தும் நாள்களாகவும் நாம் மாற்ற வேண்டும். அதற்காக எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்:

  1. முள்ளிவாய்க்கால் கஞ்சி: கிராமம் கிராமமாக அரிசி சேகரித்துக் கூட்டாகக் கஞ்சி காய்ச்சிப் பகிர்ந்தளிப்பதுடன், அந்த இடங்களில் எமது கடந்த கால வலிகளையும் அனுபவங்களையும் இளைய தலைமுறையினருக்குக் கடத்துதல்.

  2. நினைவுச் சுடர் ஏற்றுதல்: மே 18 அன்று வீடுகளிலும் பொது இடங்களிலும் சுடரேற்றி, இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருதல்.

  3. முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடல்: மே 18 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் பிரதான நினைவு நிகழ்வில் இயலுமான அனைவரும் கலந்துகொள்ளுதல்.

  4. குருதிக்கொடை மற்றும் சிரமதானம்: இக்காலப்பகுதியில் குழுக்களாக இணைந்து குருதிக்கொடை முகாம்களையும், பொது இடங்களில் சிரமதானப் பணிகளையும் முன்னெடுத்தல்.

  5. பாடசாலை மற்றும் பொது நிகழ்வுகள்: தினமும் ஒரு வேளையாவது பொது இடங்களில் சுடரேற்றுதல் மற்றும் மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள், புகைப்படக் கண்காட்சிகளை ஒழுங்கமைத்தல்.

  6. உள்ளூர் நினைவேந்தல்கள்: ஒவ்வொரு கிராமத்திலும் இடம்பெற்ற படுகொலைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளை நடத்துதல் மற்றும் உள்ளூர் மட்டத்தில் நினைவுத் தூபிகள் அல்லது கல்வெட்டுகளை அமைத்தல்.

தொடரும் இன அழிப்பை அடையாளங் காண்பதும், அதனை எமக்குச் செய்தவர்களைச் சந்ததிதோறும் மறவாதிருப்பதற்கான பணிகளைச் செய்வதுமே எம் தேசத்துக்காக நாம் ஆற்ற வேண்டிய பணியாகும் எனத் தமிழ் சிவில் சமூக அமையம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.