புதன், 29 ஏப்ரல், 2026
|
தாயகம்

ஊர்வணிகன்பற்று நில அபகரிப்பு: சிறிலங்காவின் அரச தலைவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்!

ஊர்வணிகன்பற்று நில அபகரிப்பு: சிறிலங்காவின் அரச தலைவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 29, 2026 · 2 நிமிட வாசிப்பு

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களைப் படைத்துறைத் (இராணுவத்) தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். - கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், சிறிலங்காவின் அரச தலைவருக்குச் சிறப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

பூர்வீக நிலம் கையகப்படுத்தல்:

ஊர்வணிகன்பற்று கிராமமானது மிக நீண்ட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுடன், பல தலைமுறைகளாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடமாகப் பேணி வந்த நிலமாகும். போர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கைப் படைத்துறையினால் இக்காணிகள் கையகப்படுத்தப்பட்டதுடன், இன்றுவரை மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாத துர்ப்பாக்கிய நிலையே நீடிக்கின்றது.

வழிபாட்டுத் தலங்களும் மக்களின் எதிர்ப்பும்:

தற்போது படைத்துறையின் 4 ஆவது மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவை அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பானது, 20 தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாகும். இவ்விடத்திலேயே மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகள் மற்றும் அவர்களது பண்பாட்டு விழுமியங்களுடன் ஒன்றிய முத்துமாரி அம்மன் ஆலயம், பொதுநோக்கு மண்டபம், சிறுவர் முன்பள்ளி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் சமூகக் கட்டமைப்புகளும் அமைந்துள்ளன.

தமது பூர்வீக அடையாளங்கள் அனைத்தையும் கொண்ட இந்த நிலத்தை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்கில், கடந்த 2026 ஏப்பிரல் 02 அன்று படைத்துறையினரால் நில அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன. எனினும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இப்பணிகள் அன்றைய தினமே இடைநிறுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விவகாரம்:

இவ்விடயத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு, கடந்த 2026 ஏப்பிரல் 07 அன்று என்னால் நாடாளுமன்றத்தில் கௌரவ சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களையும் சபையில் பதிவு செய்திருந்தேன். தொடர்ந்து அன்றைய தினம் மாலை 2.00 மணிக்குத் தங்களின் (அரச தலைவரின்) தலைமையில் நாடாளுமன்றக் குழு அறை 1 இல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்திலும் இக்காணி விடயம் தொடர்பில் தங்களுக்குத் தெளிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது.

உடனடித் தீர்வுக்கான கோரிக்கை:

"மக்களின் நிலம் மக்களுக்கே" என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் நின்றும், மக்களின் நலன் சார்ந்தும் செயற்பட்டு வரும் தாங்கள் தமிழ் மக்களின் இப்பூர்வீக சொந்த நிலத்தை விடுவிப்பீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். தமது சொந்த நிலங்களை இழந்து, தற்போது வாழ்வாதாரத்திற்காகக் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இம்மக்களுக்கு அறத்தின்பாற்பட்ட நீதி வழங்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே, இக்காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான தமிழ்ப் பொதுமக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகச் சுவீகரிக்க எடுக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, காணியின் உண்மையான உரிமையாளர்களான தமிழ்ப் பொதுமக்களிடமே இக்காணியினை வழங்க ஏற்பாடு செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.