திருகோணமலை சிறீ சம்புத்த சயந்தி போதிராச விகாரையின் (ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை) ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி, அதன் விகாராதிபதி தாக்கல் செய்திருந்த எழுத்தாணை (ரிட்) மனு மீதான விசாரணை நேற்று (28.04.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்தது.
குறித்த விகாரையின் விகாராதிபதி கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னிலையான அரச சட்டத்தரணி, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதிப் பத்திரத்திற்கு இணங்க, குறித்த கட்டடத்தின் சட்டவிரோதக் கட்டுமானங்களை மனுதாரரான தேரர் ஏற்கனவே அகற்றியுள்ளதால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் முன்னிலையான சனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, எதிர்மனுதாரர் தரப்பின் இந்த அறிவிப்புத் தொடர்பில் தாங்கள் திருப்தியடைவதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இதற்கமைய குறித்த மனு மீதான விசாரணையை முழுமையாக நிறைவு செய்வதற்கு உத்தரவிட்டது.