புதன், 29 ஏப்ரல், 2026
|
தாயகம்

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது: கேப்பாபிலவு இராணுவ முகாம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது: கேப்பாபிலவு இராணுவ முகாம் முன்பாக ஆர்ப்பாட்டம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 29, 2026 · 2 நிமிட வாசிப்பு

"எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ள கேப்பாபிலவு மக்கள், எதிர்வரும் மே 1 ஆம் திகதி இராணுவத் தலைமை வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்குமாறும் ஊடகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட செயலாளரிடம் நினைவூட்டல் கடிதம்:

கேப்பாபிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரனை இன்றைய தினம் நேரில் சந்தித்த கேப்பாபிலவு மக்கள், நினைவூட்டல் கடிதம் ஒன்றைக் கையளித்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், கடந்த 17 வருடங்களாகத் தமது பூர்வீக வாழ்விடத்தைக் கோரி அரசிடம் நீதி கேட்டு வருவதாகத் தெரிவித்தனர். கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் உபாலி சமரசிங்க தங்களைச் சந்தித்துக் காணி விடுவிப்புத் தொடர்பாகச் சாதகமான முடிவைப் பெற்றுத்தருவதாகக் கூறியிருந்தார். எனினும், பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையிலேயே, மாவட்ட செயலாளருக்கும் அவர் ஊடாக அமைச்சருக்கும் இந்த நினைவூட்டல் கடிதத்தைக் கையளித்ததாகக் குறிப்பிட்டனர்.

அத்துடன், மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போது காணி விடுவிப்புத் தொடர்பாக எவ்விதச் சாதகமான பதிலும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

காணி விடுவிப்பில் தொடரும் தாமதம்:

இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட காலத்தில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு, அக்குடும்பங்களுக்குக் காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், ஏறத்தாழ 255 குடும்பங்களுக்குச் சொந்தக் காணி மற்றும் மாற்றுக் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 55 குடும்பங்களுக்கு இதுவரை சொந்தக் காணி கிடைக்கவில்லை என்றும், 11 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியும் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முடக்கப்பட்ட வாழ்வாதாரமும் மே தினப் போராட்டமும்:

தமது வாழ்வாதாரமாகக் கடல், தரை மற்றும் உழவு (விவசாய) நிலங்களையே தாங்கள் நம்பியிருந்த போதிலும், இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் அந்த வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.

“போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், மக்களின் வாழ்விடத்தில் இன்னும் பாதுகாப்புச் செயலகம் என்ற பெயரில் காணி அபகரிப்புத் தொடர்வது தேவையற்றது. சிறிலங்காவின் அரச தலைவர் உடனடியாகத் தலையிட்டு மக்களின் காணியை மக்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

தமது வாழ்வாதாரங்களும் தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வருகின்ற மே மாதம் 1 ஆம் திகதி (தொழிலாளர் தினத்தன்று) கேப்பாபிலவு இராணுவத் தலைமை வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைப்பு விடுத்தனர்.

வேதனையும் குற்றச்சாட்டும்:

இன்றைய சந்திப்பின் போது, மாவட்ட செயலாளரை நேரில் சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஊடகங்களை ஏன் அழைத்து வந்தீர்கள் எனக் கேட்கப்பட்டதாகவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

அத்துடன், "கடந்த காலங்களில் பல மாவட்ட செயலாளர்கள் மாறிய போதிலும் தாங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை வந்து நில விடுவிப்பு குறித்துத் தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட மக்கள், பல அரச தலைவர்களை நேரில் சந்தித்திருந்தாலும், தற்போதைய சிறிலங்கா அரச தலைவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் புதுக்குடியிருப்புக்கு வந்தபோதும் எம்மைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது; எமது நிலத்தில் உள்ள வளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது எவ்வகையிலும் நியாயமல்ல. எமது கேப்பாபிலவு மண்ணில் எங்களை வாழ விடுங்கள்" என அவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.