புதன், 29 ஏப்ரல், 2026
|
தாயகம்

செம்மணியில் 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு: மீண்டும் மின்வருடற் பரிசோதனைக்குத் திட்டம்!

செம்மணியில் 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு: மீண்டும் மின்வருடற் பரிசோதனைக்குத் திட்டம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 29, 2026 · 1 நிமிட வாசிப்பு

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (29.04.2026) முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தின் கண்காணிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள் குறித்துச் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஏற்கனவே வடமேற்குப் பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அங்குச் சில என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே அங்கு எத்தனை எலும்புத் தொகுதிகள் காணப்படுகின்றன என்பது துல்லியமாகத் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இதுவரை 1.5 அடியிலிருந்து 2 அடி ஆழமான நிலத்தில்தான் எலும்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அகழ்வுப் பணிகளின் ஆழமானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பணிகளின் போதே தீர்மானிக்கப்படும் என்றார். அத்துடன், முன்னர் மின்வருடற் (Scan) பரிசோதனை செய்யப்பட்ட போது, தெரிவு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், ஏனைய இடங்களில் என்புத் தொகுதிகள் உள்ளனவா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் ஒருமுறை மின்வருடற் பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறித்த புதைகுழிப் பகுதியில் உள்ள மண்ணானது கறுப்பு நிறத்தில் காணப்படுவதால், அதனுள் வேறு ஏதாவது சான்றுப் பொருட்கள் இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வு செய்வதற்காக, மண்ணை அரித்து எடுக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா மேலும் தெரிவித்தார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.