ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலைத் தமது உணர்ச்சிபூர்வமான குரலால் மூட்டிய புரட்சிப் பாடகர் 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா இன்று (28.04.2026) தனது 85 ஆவது வயதில் காலமானார்.
பிறப்பும் ஆரம்பப் பயணமும்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்பிரல் 21 ஆம் திகதி இவர் பிறந்தார். ஆரம்பக் காலத்தில் சிங்கிலிப்பட்டியில் நடைபெற்ற போராட்ட மேடையொன்றில் இசைநிகழ்ச்சி (பாட்டுக்கச்சேரி) நடத்த சி.பா. ஆதித்தனார் விரும்பினார். வேறு பாடகர்கள் எவரும் வராத நிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் அங்கு மேடையேறினார். அவரது பாடல் பிடித்துப்போனதால், ஆதித்தனார் அவரைத் தமது அரசியல் பரப்புரைக்காக நியமித்துக் கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார். அங்கிருந்தபடியே திராவிடர் கழக மற்றும் கட்சி மேடைகளில் செல்லப்பா பாடி வந்தார்.
மலையகத் தமிழர்களுக்கான குரல்
1964 ஒக்டோபர் 30 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமாவோ ஒப்பந்தத்தின்படி, சுமார் ஐந்து இலட்சம் மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குத் திருப்பியனுப்பப்பட்டனர். அந்தச் சூழ்நிலையை முன்னிட்டு, ஏ.எல். நாராயணன் வரிகளில் தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒரு பாடலை ஆதித்தனார் உருவாக்கினார்.
“செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா.. இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை, சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை..” என்ற அப்பாடலை மேடைதோறும் செல்லப்பா உணர்ச்சி மேலிடப் பாடினார்.
புலிகளுடனான தொடர்பும் ஈழப் பயணமும்
திராவிட இயக்க மேடைகளில் ஒலித்த செல்லப்பாவின் குரலும் உணர்வும், 1980 களின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியப் பிரமுகரான பேபி சுப்பிரமணியத்தைக் கவர்ந்தது. ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஊடாக அவர் ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ். கோட்டை மைதானத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் அவரது இசைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இதன்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனையும் அவர் சந்தித்தார்.
அழியாத பாடல்களும் நினைவுகளும்
கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பல கவிஞர்கள் எழுதிய உணர்ச்சிமிக்க பாடல்களுக்கு இவர் உயிர்கொடுத்தார். குறிப்பாக, "தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள்" என்ற பாடல் ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் பெரும் புகழ்பெற்றது. மேலும் 'ஈழ விடுதலை எழுச்சி', 'தமிழர் தாகம்', 'வீரத்தின் வேர்கள்' போன்ற பல இசைத் தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களைப் பாடிவந்த தேனிசை செல்லப்பா மறைந்தாலும், அவரது வீரம் செறிந்த பாடல்கள் ஈழத்தமிழர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.