தையிட்டி ஆக்கிரமிப்புச் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் (28 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை) காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, காணி உறுதிப் பத்திரங்களுடன் காணி அமைந்துள்ள பகுதிகளுக்கு வருகை தந்து, தமது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்டச் செயலர் காணி உரிமையாளர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
3 ஆண்டுகாலப் போராட்டம்
தையிட்டி ஆக்கிரமிப்புச் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காணி உறுதிப் பத்திரங்களை வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்து, காணி வரைபடங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் குறித்த வாக்குறுதியில் நம்பிக்கையற்றுள்ளனர்.
அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னணி
முன்னதாக, இந்தக் காணிகளுக்கான நில அளவீடுகளைக் கடந்த 17 ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் நில அளவைத் திணைக்கள அலுவலர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் கூடியிருந்த வேளை, குறித்த விகாரையின் விகாராதிபதி (பிக்கு) காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் காரணமாக அளவீட்டுப் பணிகள் எதிர்பாராதவிதமாக இடைநிறுத்தப்பட்டன.
அன்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து பலர் வந்து விகாரையில் தங்கியிருந்ததோடு, காவல் துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தமையால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. அமைச்சு மட்டத்திலான முடிவாக இருந்தபோதிலும், பிக்குவின் ஒரேயொரு முறைப்பாட்டால் காணி அளவீடு நிறுத்தப்பட்டமைக்குக் காணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்த பின்னணியிலேயே, மீண்டும் நாளை அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வரலாற்றுப் பின்னணி
தையிட்டி ஆக்கிரமிப்புச் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியானது முந்தைய காலங்களில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டிலேயே குறித்த விகாரை அங்கு சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.