யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கான நிலங்களை அளவீடு செய்யும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். மாவட்டச் செயலருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் எழுதியுள்ளார். நில உரிமையாளர்களின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கியக் குறிப்புகள் வருமாறு:
நில உரிமையாளர்களின் எதிர்ப்பு: தையிட்டிப் பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டத்திற்குப் புறம்பாக விகாரை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நில உரிமையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நில உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள நில அளவீட்டு நடவடிக்கையை உரிமையாளர்கள் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
நடைமுறை மீறல்கள்: நில உரிமையாளர்களின் ஆட்சேபனைகளைக் கவனத்தில் கொள்ளாது, எதிர்வரும் 28.04.2026 அன்று காலை நில அளவீடுகளை முன்னெடுக்குமாறு வலி. வடக்கு பிரதேச செயலருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவித்தல் கடிதங்கள் உரிய கால அவகாசமின்றித் தொலைபேசி ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை, உரிமையாளர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு முயற்சியாகும் எனச் சாடப்பட்டுள்ளது.
எல்லைகளை அடையாளப்படுத்துவதில் உள்ள சிக்கல்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் வசம் இருந்த இந்தக் காணிகளில் இருந்த வேலிகள், மரங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுப் புதிய கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில், திடீரென நில உரிமையாளர்களை அழைத்து எல்லைகளைக் காண்பிக்குமாறு கோருவது நியாயமற்றது என உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உண்மை நிலை மறைப்பு: நில அளவீடு தொடர்பாகப் பிரதேச செயலரால் அனுப்பப்பட்ட கடிதத்தில், “திஸ்ஸ விகாரை தொடர்பான நிலப் பிணக்கு” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த விகாரை சட்டத்திற்குப் புறம்பானது என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவும், நில அளவீடு என்ற பெயரில் சட்டவிரோத விகாரைக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியே இதுவென்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கக் கோரிக்கை: காணிகளை விடுவிப்பதற்கான முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தொடர்பாக நில உரிமையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைத்து விரிவாகக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

