ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
|
தாயகம்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: உயர் அதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: உயர் அதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 26, 2026 · 1 நிமிட வாசிப்பு

வட மாகாணத்தில் 'சேவையின் தேவை கருதி' மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பில், வட மாகாண உயர் அதிகாரிகள் மூவரை நேரில் முன்னிலையாகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அழைப்பாணை விடுத்துள்ளது.

யாருக்கு அழைப்பு?

வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகிய மூவருக்கே இந்த அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னணி

வடக்கில் சேவையின் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் குறித்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான அழைப்பு தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை விவரம்

எதிர்வரும் 2026 ஏப்பிரல் 28 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு, கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைமையகத்தின் 7 ஆவது மாடியில் (அறை எண் 05) இந்த விசாரணை நடைபெறவுள்ளது. இதன்போது உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நேரில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை குறித்த எச்சரிக்கை

இந்த அழைப்பாணைக் கடிதத்தில் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் சரத்துகளைச் சுட்டிக்காட்டி கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • அழைப்பாணை கிடைக்கப்பெற்றவர்கள் ஆணைக்குழுவின் முன் குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் முன்னிலையாக வேண்டியது கட்டாயமாகும்.

  • ஆணைக்குழு எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்; அத்துடன் கோரப்படும் ஆவணங்கள் அல்லது பொருட்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமின்றி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகத் தவறுவது அல்லது மறுப்பது, ஆணைக்குழுவின் கட்டளைகளைப் பின்பற்றாதது ஆகியவை ஆணைக்குழுவை அவமதிக்கும் குற்றமாகக் கருதப்படும்.

  • இத்தகைய அவமதிப்பானது, இலங்கை உயர் நீதிமன்றத்தை (Supreme Court) அவமதித்த குற்றத்திற்கு நிகராகக் கருதப்பட்டு, குறித்த சட்டத்தின் 21 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக அமையும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.