சனி, 18 ஏப்ரல், 2026
|
தாயகம்

தொல்லியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளுடன் பண்டைய யாழ் நாகரிகத்தை மீளாய்வு செய்யும் புதிய நூல்!

தொல்லியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளுடன் பண்டைய யாழ் நாகரிகத்தை மீளாய்வு செய்யும் புதிய நூல்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 18, 2026 · 2 நிமிட வாசிப்பு

பண்டைய யாழ்ப்பாணச் சமூகம் மற்றும் பண்பாடு குறித்த ஐம்பது ஆண்டுகால ஆய்வுகளின் தொகுப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் மூத்த வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் புதிய ஆய்வு நூல் கடந்த ஏப்பிரல் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.

'பண்டைய நாகரிகத்தின் ஒரு பார்வை: யாழ்ப்பாணத்தின் சமூகம் மற்றும் பண்பாடு (கி.மு 300 முதல் கி.பி 500 வரை)' (Glimpses of an Ancient Civilisation: Society and Culture in Jaffna (300 BC to AD 500)) எனும் தலைப்பிலான இந்நூல், தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பகுப்பாய்வுகளின் ஊடாகப் பண்டைய யாழ்ப்பாணத்தின் சமூக-பொருளாதார மற்றும் பண்பாட்டு அடிப்படைகளை ஆராய்கிறது.

ஐந்து கருப்பொருள் பிரிவுகளின் கீழ் பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அகழ்வாய்வுகள் மற்றும் ஆய்வுகள் ஊடாகத் திரட்டப்பட்ட வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவற்றுள் பல இதுவரை பயன்படுத்தப்படாமலும், வாசிக்கப்படாமலும் இருந்தவை என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சி. பத்மநாதன் ஆற்றிய உரை

நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பத்மநாதன், "கடந்த 100 ஆண்டுகளாகத் திரட்டப்பட்டு, இதுவரை பயன்படுத்தப்படாமல் அல்லது வாசிக்கப்படாமல் இருந்த வரலாற்றுத் தகவல்களை இந்த ஆய்வு ஒன்றிணைத்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆழமாக வாசித்ததன் ஊடாக, தொலைதூரக் கடந்த காலத்தின் சமூகத்தையும் பண்பாட்டையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

நூலின் சிறப்பம்சங்கள்:

  • அறிவியல் முறைப்படியான பகுப்பாய்வு: வல்லிபுரம் பொன்னேடு (Vallipuram Gold Plate) போன்ற வரலாற்றுச் சான்றுகளை மீளாய்வு செய்வதில், இந்நூல் அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கையாள்கிறது. தன்னிச்சையான அரசியல் முடிவுகளுக்குச் செல்லாமல், சரிபார்க்கக்கூடிய எழுத்துப்பூர்வ சான்றுகளின் அடிப்படையிலேயே ஆய்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தென்னிலங்கை அரசுகளுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டிய அவசியமின்றி, வடக்கில் முற்காலத் தமிழ் அரசியல் கட்டமைப்புகள் உருவானதை விளக்குவதற்கான புதிய தளத்தை உருவாக்குகிறது.

  • நாகர் சமூகத்தின் பங்களிப்பு: இலங்கையின் பண்டைய வரலாற்றில் நாகர்களை ஒரு அடிப்படைச் சமூகமாக அடையாளப்படுத்துவதுடன், அவர்கள் தீவின் தமிழ் மக்களின் மூதாதையர்களாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளையும் இந்நூல் ஆராய்கிறது. கி.மு 900 ஆம் ஆண்டு முதல் அவர்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இரும்புத் தொழில்நுட்ப அறிமுகம், வேளாண்மை வளர்ச்சி மற்றும் நீண்டகாலக் குடியிருப்புகளுக்கு ஆதரவளித்த நீர்ப்பாசன அமைப்புகள் ஆகியவற்றுடன் நாகர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

  • கடல்வழி வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றமும்: உரோமானிய நாணயங்கள் போன்ற தொல்லியல் கண்டுபிடிப்புகளின் ஆதரவுடன், உரோமானியப் பேரரசு உள்ளிட்ட நாடுகளுடனான விரிவான கடல்வழி வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகளையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்து மற்றும் பௌத்த மதங்களில் நாக வழிபாட்டின் நீடித்த செல்வாக்கைக் குறிப்பிட்டு, உள்ளூர் நாட்டார் மரபுகளுடன் மத நடைமுறைகள் எவ்வாறு ஒன்றிணைந்தன என்பதையும் இது ஆராய்கிறது.

இலங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி தொடர்பான வரலாற்று விவரிப்புகள் மற்றும் அடையாளங்கள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்நூல் வெளியாகியுள்ளது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் சான்றுகளை ஒருங்கிணைத்து, இலங்கையின் பண்டைய நாகரிகம் மற்றும் பன்மைத்துவம் குறித்த வாதங்களுக்கு இந்நூல் மிக வலுவானதொரு வரலாற்றுப் பார்வையை வழங்குகிறது.

கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் குடிமைச் சமூகப் பேராளர்கள் (சிவில் சமூக பிரதிநிதிகள்) கலந்துகொண்ட இந்நூல் வெளியீட்டு விழா, பண்டைய தமிழ் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும், விளக்குவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகப் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.