தையிட்டி விகாரை காணி அளவை திடீர் நிறுத்தம்: பிக்குவின் முறைப்பாட்டால் மக்கள் கொந்தளிப்பு!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த காணி அளவீட்டுப் பணிகள் எதிர்பாராதவிதமாக நிறுத்தப்பட்டுள்ளன. இப்பணிகள் எதிர்வரும் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்று அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் கடந்த 11ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகரன் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் கோரியிருந்தனர். இதற்கமைய, இன்றைய தினம் காணி அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
பிக்குவின் முறைப்பாடும் தென்னிலங்கையரின் வருகையும்
இந்நிலையில், நேற்றையதினம் தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர், விகாரைக் காணியைச் சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாகப் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதேவேளை, நேற்று இரவு மூன்று பேருந்துகளில் தென்னிலங்கையிலிருந்து பலர் வழிபாட்டிற்காக என வந்து விகாரையில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இன்று காலை பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
அதிகாரிகளின் தாமதமும் மக்களின் ஏமாற்றமும்:
தமது காணிகளை அடையாளம் காட்டுவதற்காக காணி உரிமையாளர்கள் இன்று காலை விகாரைப் பகுதிக்கு வந்திருந்தனர். ஆனால், காலை 9:30 மணி வரையிலும் காணி அளவைக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், மாவட்ட செயலர், பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அங்கு வரவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் உருவானது. அதன் பின்னர் அங்கு வந்த மாவட்ட செயலர் ம. பிரதீபன் மற்றும் நில அளவைத் திணைக்களத்தினர், பிக்குவின் முறைப்பாட்டால் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் மக்களுக்கு விளக்கமளித்தனர்.
அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் ஒற்றை மனிதர்
அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்த மக்கள், மாவட்ட செயலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து எடுத்த முடிவை, விகாராதிபதியின் ஒரேயொரு முறைப்பாட்டால் நிறைவேற்ற முடியாமல் போனது குறித்து மக்கள் விசனம் வெளியிட்டனர்.
"தையிட்டி காணிக்குப் பேராசைப்படுவது இந்த ஒற்றை மனிதரே; அவர் அதிகாரிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறார்" என காணி உரிமையாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறும் வகையில் ஒரு தனிநபர் செயற்படுவதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு அரசாங்கம் காணி அளவீட்டை நிறுத்தியுள்ளதாகவும் மக்கள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
வரலாற்றுப் பின்னணி
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியானது, முந்தைய காலங்களில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்பட்ட வேளை, 2010 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டிலேயே குறித்த விகாரை அங்கு கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.