வெள்ளி, 17 ஏப்ரல், 2026
|
தாயகம்

ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்கான வரைபைத் தயாரிக்க 28 பேர் கொண்ட வழிநடத்தல் குழு அமைப்பு!

ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்கான வரைபைத் தயாரிக்க 28 பேர் கொண்ட வழிநடத்தல் குழு அமைப்பு!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 17, 2026 · 3 நிமிட வாசிப்பு

இலங்கையில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட வரைபைத் தயாரிப்பதற்காக, ‘ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின்’ வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி தி. விக்னேஸ்வரன் இன்று (17.04.2026) வெளியிட்டுள்ளார்.

ஒற்றையாட்சி வரைபு முற்றாக நிராகரிப்பு: தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் தரப்புகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இப்புதிய குழுவை அமைப்பதற்கான இணக்கம் காணப்பட்டது.

தற்போதைய அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்படவுள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பானது ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழர் தேசம் மற்றும் இறைமை அடிப்படையிலான கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு மறுதலிப்பதாக உள்ளதால், அதனை முற்றாக நிராகரிப்பது என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாகககொண்டு புதிய தீர்வுத்திட்ட வரைபைத் தயாரிப்பது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஈழத்தமிழர்களின் ஒருங்கிணைந்த பொதுவான நிலைப்பாட்டை முறையாக முன்வைக்கும் நோக்கில் இந்த 28 பேர் கொண்ட வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழுவின் பிரதான பணிகள்: இந்த வழிநடத்தல் குழு இரண்டு பிரதான வரைபுகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும்:

  1. சமூக ஒப்பந்த வரைபு: தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில், முழுமையான சுயநிர்ணய உரிமையை ஏற்கும் வகையிலான சமூக ஒப்பந்தம் ஒன்றை ஈழத்தமிழர்களுக்கும் சிங்கள தேசத்திற்கும் இடையில் உருவாக்குவதற்கான வரைபைத் தயாரித்தல்.

  2. விரிவான கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு: சுயநிர்ணய உரிமையைக் கூட்டாட்சி (சமஷ்டி) முறைமைக்குள் முழுமையாக அனுபவிப்பதற்கான விரிவான தீர்வுத்திட்ட வரைபைத் தயாரித்தல்.

வரைபு உருவாக்க வழிமுறைகளும் காலக்கெடுவும்: தமிழ் மக்கள் பேரவையினால் 2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபு, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்புக்கான (ISGA) யோசனைகள், சர்வதேச மட்டத்திலான கூட்டாட்சி முறைமைகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் முன்மொழிவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வரைபு உருவாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த வழிநடத்தல் குழு தனது உத்தேச அறிக்கையை வெளியிடும். அதன் பின்னர், தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களிடமும், சிவில் சமூக அமைப்புகளிடமும் திறந்த மற்றும் வெளிப்படையான முறையில் கருத்துகள் பெறப்பட்டு இறுதி அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தமிழ்த் தேசத்தின் ஏகோபித்த முடிவாக முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழு உறுப்பினர்களின் முழுமையான விபரம்:

  1. கலாநிதி தி. விக்னேஸ்வரன் (முதுநிலை விரிவுரையாளர்) – ஒருங்கிணைப்பாளர்

  2. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர்) – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை

  3. கலாநிதி இ. ஜெயந்திரன் – முதுநிலை விரிவுரையாளர்

  4. கலாநிதி யு. சரவணபவன் – முதுநிலை விரிவுரையாளர்

  5. கலாநிதி கு. குருபரன்சிரேஷ்ட சட்டத்தரணி

  6. திரு. பிரபாகரன் – தலைவர், போராளிகள் நலன்புரிச் சங்கம்

  7. வைத்திய கலாநிதி எஸ். குமாரவேள் – தமிழ் சிவில் சமூக அமையம்

  8. திரு. ம. நிலாந்தன் – மூத்த அரசியல் ஆய்வாளர்

  9. திரு. அ. கஜேந்திரன் – தமிழ் சிவில் சமூக அமையம்

  10. அ. அனுசானி – அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்

  11. திருமதி சுவந்தினி சிவஞானராஜ் – சிவில் சமூக அமைப்புகளின் சம்மேளனம்

  12. அருட்தந்தை சத்தியசீலன் விமலசேகரன் வசந்தன் – பங்குத்தந்தை (கட்டைக்காடு) / தமிழர் மரபுரிமைப் பேரவை உறுப்பினர்

  13. திரு. ஜெ. ஜெயறூபன் – சிரேஷ்ட சட்டத்தரணி

  14. திரு. பொ. ந. சிங்கம் – தமிழ் சிவில் சமூக அமையம்

  15. பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் – முதுநிலை விரிவுரையாளர், அரசறிவியல்துறை

  16. பேராசிரியர் ஏ. சூசை ஆனந்தன் – ஓய்வுநிலைப் பேராசிரியர்

  17. திரு. சி. அ. யோதிலிங்கம் – சிரேஷ்ட சட்டத்தரணி / தலைவர், சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

  18. திரு. எஸ். விஜயகுமார் – சிரேஷ்ட சட்டத்தரணி / தமிழ் சிவில் சமூக அமையம்

  19. திரு. மாரிமுத்து பிரகாசன் – முதுநிலை விரிவுரையாளர்

  20. அருட்தந்தை மார்க்கஸ் – மன்னார் பிரஜைகள் குழு

  21. திரு. கே. வி. தவராசா – ஜனாதிபதி சட்டத்தரணி / தலைவர், ஜனநாயக தமிழரசுக் கட்சி

  22. திரு. ந. சிறீகாந்தா – சிரேஷ்ட சட்டத்தரணி / தலைவர், தமிழ்த் தேசியக் கட்சி

  23. திரு. பொ. ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

  24. திரு. சுகாஸ் கனகரட்ணம் – சிரேஷ்ட சட்டத்தரணி

  25. திரு. நடராஜர் காண்டீபன் – சிரேஷ்ட சட்டத்தரணி

  26. திரு. க. அருந்தவபாலன் – தமிழ்த் தேசியப் பேரவை

  27. திரு. செல்வராசா கஜேந்திரன் – பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

  28. திரு. சிவகுமார் சிவகஜன் – ஆய்வாளர், சட்ட மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம், யாழ்ப்பாணம்

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.