வியாழன், 16 ஏப்ரல், 2026
|
தாயகம்

பன்னாட்டு நாடுகளை ஏமாற்றவே தையிட்டியில் நில அளவை: அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார் கஜேந்திரன்!

பன்னாட்டு நாடுகளை ஏமாற்றவே தையிட்டியில் நில அளவை: அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார் கஜேந்திரன்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 16, 2026 · 2 நிமிட வாசிப்பு

தையிட்டி விகாரைச் சிக்கல் பன்னாட்டு நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் நாள்களில் அமைச்சர்கள் குழு வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளது. அதனாலேயே, வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டிச் சிக்கலைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாகக் நில) உரிமையாளர்களோடு அரசு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் 15.04.2026 (புதன்கிழமை) அன்று நடைபெற்ற “தையிட்டி: அடுத்து என்ன?” எனும் தலைப்பிலான தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் குடிமைச் சமூகப் பேராளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த செய்திகள் வருமாறு:

படையினரின் கட்டுப்பாட்டில் விகாரை

தையிட்டி விகாரையின் பெயர்ப்பலகையில், இது 'சிறிலங்காப் படையினரால் கட்டப்பட்டு அவர்களால் பராமரிக்கப்படுகின்ற விகாரை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகாரை பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமானதா என்ற கேள்வியும் எழுகிறது. விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் அந்த விகாரையின் வாசலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றது. தென்பகுதியில் குழப்பங்கள் ஏற்படும் எனக் கூறிக்கொண்டு தையிட்டி விகாரைக்குத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இதன் பொருள், அந்த விகாரையில் இருக்கக்கூடிய ஒரு துண்டு நிலத்தைக் கூட விடுவிக்க முடியாது என்பதே ஆகும்.

பன்னாட்டு அழுத்தமும் அரசின் நாடகமும்

தையிட்டி விகாரைச் சிக்கல் பன்னாட்டு நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் அவையின் இலங்கைக்கான வதிவிடப் பேராளர், தையிட்டி விகாரைச் சிக்கல் தொடர்பாகவும் எங்களோடு கலந்துரையாடியிருந்தார். இச்சிக்கலைத் தாங்கள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார். தையிட்டி விவகாரம் தொடர்பில் உலக நாடுகளால் இந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் நாள்களில் அமைச்சர்கள் குழு வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ள நிலையில், அதற்காகத் தையிட்டிச் சிக்கலைத் தீர்ப்பது போன்று வெளிநாடுகளுக்குக் காட்டிக் கொள்வதற்காகவே அவசர அவசரமாகக் காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது. வேறு இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்தும் போது (சுவீகரிக்கும் போது) எழுத்து மூலமான அறிவிப்பின் வழியாகவே நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள். ஆனால், தையிட்டி விகாரைச் சிக்கலில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது.

நில அளவைத் துறையின் நோக்கம் என்ன?

நில அளவைத் துறை எந்தக் கட்டளையின் அடிப்படையில் இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்குத் தயாராகின்றது? எழுத்து மூலமாகக் கட்டளைகள் எதுவும் வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின், என்ன தேவைக்காகக் குறித்த காணிகள் அளவிடப்படுகின்றன என அந்த எழுத்து மூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. மக்களுக்குக் காணிகளை விடுவிப்பதற்காகவே இந்த அரசு காணிகளை அளவீடு செய்கின்றது என்பதில் எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

குருந்தூர் மலைப் போல ஏமாற்றச் சதி

குருந்தூர் மலையிலும் அகழ்வாய்வுப் பணிகளை மட்டுமே செய்வோம், எவ்விதக் கட்டுமானப் பணிகளும் இடம்பெறாது என அப்போதைய பௌத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். ஆனால், தற்போது ஒரு விகாரை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதேபோலத் தையிட்டிப் பகுதியிலும் நிலைமை கைமீறிப் போன பின்னர் எதிர்ப்புக் காட்டி எவ்விதப் பயனும் இல்லை. தையிட்டிப் பகுதியில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவே அந்த ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. இல்லையெனில், அந்த இடம் முழுவதுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

எழுத்துமூல உறுதிமொழி இன்றி அளவிட விடமாட்டோம்

தையிட்டிக் காணி உரிமையாளர்கள் மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என வடக்கு ஆளுநர் அண்மையில் அடிப்படையற்ற பொய்யொன்றைக் கூறியிருந்தார். தொடர்ந்தும் தையிட்டி விகாரைப் பகுதியைச் சூழவுள்ள காணிகளுக்குக் காவல்துறை மற்றும் படைத்துறைப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் அவதானிக்கின்ற போது, காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே அரசு செயற்படுகின்றது என்ற உறுதிப்பாடு இல்லை என்றே கூறவேண்டும்.

அரசு காணிகளை அளவீடு செய்து மக்களுக்கு வழங்கும் என்பதனை எழுத்து மூலமாக அறிவிக்குமாக இருந்தால், காணிகளை அளவீடு செய்வதற்கான ஒப்புதல் வழங்குவது தொடர்பில் சிந்திக்கலாம். ஆனால், அப்படி ஓர் எழுத்துமூல உறுதிமொழியைத் தராத நிலையில் அளவீட்டுப் பணிகளை அனுமதிக்க முடியாது என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.