தையிட்டி நில அளவை ஓர் ஏமாற்று நாடகமா? - இறுதி முடிவு நில உரிமையாளர்களின் கையில்!
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த தமிழர் நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசு முன்னெடுக்கவுள்ள நில அளவைப் பணிகள் குறித்தும் ஆராயும் சிறப்புக் கலந்துரையாடல் நேற்று (15.04.2026, புதன்கிழமை) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள முதன்மை அரசியல் தலைவர்கள், வழக்குரைஞர்கள், குடிமைச் சமூகப் பேராளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தினர்.
கடந்த சனிக்கிழமை தையிட்டிக்குச் சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17 ஆம் நாள்) காலை 9 மணிக்குக் காணிகள் (நிலங்கள்) அளவீடு செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என அறிவித்திருந்தார். எனினும், விகாரை அமைந்துள்ள நிலம் தொடர்பில் அரசு காக்கும் மௌனம் மக்கள் மத்தியில் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் நில விடுவிப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் அதேவேளை, மறுபுறம் இந்தச் சட்டத்திற்குப் புறம்பான விகாரையை முறைப்படி பதிவு செய்வதற்கான மறைமுக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
காணிகளை அளவீடு செய்வதால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. நிலங்களை அளவீடு செய்ய அனுமதிப்பதன் ஊடாக அவற்றுக்கான வரைபடங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், தற்போது வரை உறுதிப்பத்திரங்களுடன் இருக்கும் 17 உரிமையாளர்களின் காணிகளை அடையாளம் காண இது உதவும் எனவும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். "நிலங்களை விடுவிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அளவீடு செய்யச் சம்மதிக்கிறோம்" என வழக்குரைஞர்கள் ஊடாக நில அளவைத் துறைக்குச் சம்மதக் கடிதம் அளித்துவிட்டு அளவீட்டை அனுமதிக்கலாம் என்றும், எதிர்காலத்தில் அரசு நிலங்களைக் கையகப்படுத்த முயன்றால் இதைக் கொண்டு சட்டப் போராட்டம் நடத்தலாம் என்றும் அவர்கள் கருத்துரைத்தனர்.
ஆனால், இதனை மறுத்த பெரும்பாலானோர், சிறிலங்காவின் நீதித்துறையையும் சட்டங்களையும் நம்பித் தமிழர்கள் ஏமாந்து போயுள்ளதாகக் கவலை வெளியிட்டனர். நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் நீதிமன்றத் தடையை மீறிப் பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டமை, குருந்தூர் மலையில் நீதிமன்றத் தடையை மீறி விகாரை கட்டப்பட்டமை மற்றும் நீதிபதி நாட்டை விட்டே தப்பிச் செல்ல நேர்ந்தமை ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில், அளவீடு செய்யச் சம்மதித்தால் அதுவே நில எடுப்பிற்கான (சுவீகரிப்பு) முதல் படியாக அமைந்துவிடும் என்றும், பின்னர் அரசிதழ் (வர்த்தமானி) மூலம் விகாரைக்கு என நிலங்களை அரசு எளிதாகக் கையகப்படுத்திவிடும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டனர். "எந்தவொரு இடத்திலும் காணிகளை அளந்து விடுவிப்பதில்லை; அவர்கள் காணிகளை விடுவிக்கட்டும், உரிமையாளர்கள் அளந்து எல்லைப்படுத்திக் கொள்வார்கள்" என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலங்களை 'உரிமை கோரப்படாத காணிகள்' என அரசு கையகப்படுத்தும் வாய்ப்புள்ளதால் அளவீட்டிற்குச் சம்மதிக்காமல் விகாரையை முற்றாக அகற்றப் போராடுவதே சிறந்தது என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கசேந்திரன், வி. மணிவண்ணன், வழக்குரைஞர் க. சுகாசு உள்ளிட்ட பலரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
முடிவில், விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், நிலமிழந்த மக்களின் உரிமைகளுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இணைந்து போராடுவது எனவும் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. இருப்பினும், நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நில அளவைப் பணிகளுக்குச் சம்மதிப்பதா, இல்லையா என்பது குறித்து இக்கூட்டத்தில் எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை. எனவே, நில அளவையை அனுமதிப்பதா அல்லது தடுத்து நிறுத்துவதா என்பதற்கான இறுதி முடிவு காணி உரிமையாளர்களின் கையிலேயே உள்ளது.















