காணி சுவீகரிப்பு நடைபெறாது என எழுத்துமூலம் தர மாவட்டச் செயலாளர் மறுப்பு: தையிட்டி காணி உரிமையாளர் குற்றச்சாட்டு!
தையிட்டியில் காணி அளவீட்டின் போது காணி சுவீகரிப்பு நடைபெறாது என்பதனை எழுத்து மூலமாகத் தருமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம் நாங்கள் கோரியபோதிலும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார் எனத் தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருசன் சுகுமாரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நேற்று (15.04.2026) நடைபெற்ற 'தையிட்டி: அடுத்து என்ன?' எனும் தலைப்பிலான காணி உரிமையாளர்களுக்கும் குடிமைச் சமூகப் பேராளர்களுக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த அளவீடானது காணிகளை அளந்து விடுவிப்பதற்கான நோக்கத்திற்காக மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, வேறு எந்த நோக்கத்தையும் கொண்டதல்ல. காணி சுவீகரிப்பு நோக்கத்திற்காக இது நடைபெறவில்லை என்பதனை எங்களுக்கு எழுத்து மூலம் தர வேண்டும் எனக் கோரி கடிதமொன்றை நாங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம் கையளித்திருந்தோம். ஆனால் நாங்கள் அந்தக் கடிதத்தைக் கையளித்த போது, அவ்வாறான உறுதிமொழியைத் தர முடியாது என அவர் தெரிவித்துவிட்டார். ஆனாலும் நாங்கள் எமது கோரிக்கையை வலியுறுத்தி அக்கடிதத்தை வழங்கியுள்ளோம்.

காணிகளை விடுவிப்பதற்காக மட்டுமே அளவீடு என அவர்கள் முன்னர் அரசுத் தரப்போடு நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தனர். அந்தக் கூட்டத்தின் முழுமையான குறிப்புகளையும் நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதனைத் தருவதாக அவர்கள் உறுதியளித்த போதிலும், இன்னமும் அக்குறிப்புகளை முறைப்படி ஆவணமாக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர், அதாவது 2024 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் அளவீடு செய்ய வந்தபோது, எங்களுடைய காணிக்குள் எங்களையே அவர்கள் அனுமதிக்கவில்லை; அந்த இடத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவ்வேளையில், நாங்கள் பிரதேச செயலரிடம் அரச முத்திரையுடன் (இலச்சினை) கூடிய ஆவணம் ஒன்றில் காணிகள் தொடர்பில் உறுதிப்படுத்தித் தருமாறு கோரியிருந்தோம். அதற்கு அவர்கள், அவ்வாறு செய்ய முடியாது எனவும், அத்தகைய நடைமுறை ஏதுமில்லை எனவும் தெரிவித்தனர்.
எனவே, இக்கூட்டத்தில் உள்ள சட்ட வல்லுநர்கள் எங்களுக்கு இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறான அரச ஆவணம் ஒன்றினை எங்களுக்குத் தரலாமா? அது சட்டப்படி இயலுமான ஒன்றா? என்பதை நீங்கள் விளக்க வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
