உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பாடசாலைகளில் மேல் மாகாணமும் ஒட்டுமொத்தத்தில் வட மாகாணமும் முதலிடம்!
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் தரவுகள் வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்தமாகப் பரீட்சைக்குத் தோற்றிய 281,810 விண்ணப்பதாரர்களில் 176,527 பேர் (62.64 வீதம்) பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மட்டத்தில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் மட்டத்தில் வட மாகாணமும் முன்னிலையில் உள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் முடிவுகளைக் கருத்தில் கொள்ளும் போது, மேல் மாகாணம் 69.43 வீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்குப் பரீட்சைக்குத் தோற்றிய 53,275 மாணவர்களில் 36,987 பேர் தகுதி பெற்றுள்ளனர். அத்துடன், மூன்று பாடங்களிலும் 'A' சித்தி பெற்றவர்களில் மேல் மாகாணம் அதிக எண்ணிக்கையையும் (2,328 மாணவர்கள்), அதிக வீதத்தையும் (4.37 வீதம்) கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வடமேல் மாகாணம் 68.48 வீதத்துடன் இரண்டாம் இடத்தையும், வட மாகாணம் 66.91 வீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
அதேவேளை, பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த முடிவுகளின் அடிப்படையில், வட மாகாணம் 65.19 வீதத்தைப் பெற்றுத் தேசிய ரீதியில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்பட்டியலில் மேல் மாகாணம் 63.76 வீதத்துடன் இரண்டாம் இடத்தையும், தென் மாகாணம் 63.69 வீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், வடமத்திய மாகாணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் மட்டத்தில் 60.91 வீதத்துடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ள இம்மாகாணத்தில், அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் வீதம் ஒட்டுமொத்த முடிவுகளில் 12.75 வீதமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.