செவ்வாய், 14 ஏப்ரல், 2026
|
தாயகம்

வெடுக்குநாறி மலையில் தொன்மை வழிபாடு: 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய நிழற்படச் சான்று!

வெடுக்குநாறி மலையில் தொன்மை வழிபாடு: 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய நிழற்படச் சான்று!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 14, 2026 · 1 நிமிட வாசிப்பு

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவில் தொடர்பான வரலாற்று முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1990 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரிய நிழற்படம் (புகைப்படம்) ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

வெளியாகியுள்ள அந்த நிழற்படமானது 1990 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 16 ஆம் நாள் (சித்திரை 03) எடுக்கப்பட்டதாகும். அதில் ஒரு குடும்பத்தினர் மலையின் உச்சிப்பகுதியில் வழிபாட்டிற்காகச் சென்றிருப்பது பதிவாகியுள்ளது. இந்தப் படத்தில் இருப்பவர்களில் ஒருவரான தற்போதைய 80 அகவை முதியவர், தனது பட்டறிவைப் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.

"1990 களிலேயே நெடுங்கேணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களான ஒலுமடு, முல்லைத்தீவு எல்லைப்புற ஊர்களைச் சேர்ந்த மக்கள் வண்டில் கட்டிக்கொண்டு வெடுக்குநாறி மலைக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக, தொல்பொருள் துறையினரும் சில தரப்பினரும் வெடுக்குநாறி மலையில் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னரே தமிழர் வழிபாடு அல்லது நில ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றதாகக் கூறி வருகின்றனர். ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த நிழற்படம், அங்குத் தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பதை ஐயமற உறுதிப்படுத்துகிறது.

மலையைச் சுற்றி அடர்ந்த காடுகளும், 'வெடுக்குநாறி' மரங்களும் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் குகைகள் இப்பகுதி பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின் தொன்மை வாய்ந்த வழிபாட்டு இடமாக இருந்ததைக் காட்டுகின்றன.

2018 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதி தொல்பொருள் துறையால் கையகப்படுத்தப்பட்டு, அங்குள்ள தெய்வத் திருமேனிகள் அகற்றப்படுவதும், வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு சிவராத்திரி வழிபாட்டின் போது அடியார்கள் சிறிலங்காக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டமையும் ஈங்கு நினைவுகூரத்தக்கது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.