தையிட்டி விகாரை நிலங்கள் 17 இல் அளவீடு: விரைவில் ஒப்படைப்பு என அமைச்சர் அறிவிப்பு ! - சந்தேகம் வெளியிடும் மக்கள் !
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு - தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 17 ஆம் நாள் நில அளவீடுகள் முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன் பின்னர்ச் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'தையிட்டி விகாரை தொடர்பான நீண்டகாலச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் எமது அரசு மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது. தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளுக்குரிய 17 உரிமையாளர்கள் உறுதிப்பத்திரங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது காணி எல்லைகளைத் துல்லியமாக அடையாளப்படுத்துவதற்காக வரைபடம் ஒன்று தேவையாக உள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் நாள் காலை 9 மணியளவில் நில அளவைத் துறை அலுவலர்களால் காணி அளவீட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிலத்தை உரிய மக்களிடம் ஒப்படைப்பதற்கு அரசு என்ற முறையில் நாம் தயாராக இருக்கின்றோம். வெகுவிரைவில் இச்சிக்கலுக்கு முடிவு கட்டப்படும்' என்றார்.

இதன்போது, தையிட்டி விகாரை விவகாரத்தில் நாக விகாரையின் முதன்மைப் பிக்குவின் தலையீடு குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விடையளித்த அமைச்சர், பௌத்த மதத்தில் பல்வேறு மகா சங்கங்கள் காணப்படுகின்றன. நாக விகாரையும் திஸ்ஸ விகாரையும் வௌ;வேறு பெரும் சங்கங்களின் கீழ் இயங்குகின்றன. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவை குறித்துப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. மக்களின் காணிகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முதன்மை நோக்கமாகும்' என்று தெரிவித்தார்.
எனினும், குறித்த இச்சந்திப்பின் போது விகாரை அமைந்துள்ள காணிக்கு என்ன நிகழப்போகின்றது என்பது தொடர்பில் அமைச்சர் தலைமையிலான குழுவினரால் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. காணிகளை அளவீடு செய்வதனை அடிப்படையாகக் கொண்டு காணி உரிமையாளர்களிடையே எல்லைச் சிக்கலைத் தோற்றுவித்து, இச்சிக்கலைத் தீர்த்துவைப்பதைக் காலந்தாழ்த்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான சிறிலங்கா அரசு முயல்வதாக மக்களால் ஐயங்கள் வெளியிடப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளிடம் சிறிலங்காவின் அரச பிரதிநிதிகள் அண்மையில், 'நாங்கள் காணிகளை மக்களிடம் வழங்கத் தயாராகவே உள்ளோம், ஆனால் மக்களிடம் நிலம் தொடர்பான பிணக்குகள் இருப்பதாகவும், காணி உறுதிப்பத்திரங்கள் அவர்களிடம் தெளிவாக இல்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார். அரசப் பிரதிநிதிகளின் தற்போதைய இந்த நடவடிக்கைகள், அமைச்சரின் அக்கூற்றை உண்மையாக்குவதனை நோக்கமாகக் கொண்டுள்ளதோ என்பதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளன.
காணி உரிமையாளர்களிடம் நில உறுதிப்பத்திரம் இருக்கிறதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயும் அரசாங்கம், நிலத்தை ஆக்கிரமித்து விகாரையை அமைத்துள்ள பிக்குவிடம் சட்டப்படியான ஆவணங்கள் உள்ளனவா என்று ஏன் இதுவரை ஆராயவில்லை என்று காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு, 'அவரை நாங்கள் கேட்க முடியாது என்றும், நீங்கள் தான் அதனை உறுதி செய்ய வேண்டும்' என்றும் தெரிவித்து, அமைச்சர் தலைமையிலான குழுவினர் உரிய விடையளிக்காமல் சென்றமை குறிப்பிடத்தக்கது.
