வெடுக்குநாறி மலையை அபகரிக்கப் புதிய சதி: பௌத்த தலமாக அறிவிக்கச் சிறிலங்கா அரசு தீவிரம்!
தமிழ்ப் பௌத்தத்தின் இருப்பை மறுத்து தமிழர்களின் தொன்மை வாய்ந்த வெடுக்குநாறி மலை புத்த நெறிக்கு உரியதாம்! வரலாற்றுத் தடயங்களை அழிக்கச் சிறிலங்கா அரசு தீவிரம்
வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் தலமான வெடுக்குநாறி மலை - ஆதிசிவன் கோவில் நிலங்களை முழுமையாக அபகரிக்கும் நோக்கில் சிறிலங்கா அரசு அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. வெடுக்குநாறி மலையில் உள்ள வழிபாட்டு அடையாளங்கள் அனைத்தும் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை எனத் தெரிவித்துள்ள சிறிலங்கா அமைச்சர் சுனில் செனவி, அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (09.04.2026) சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய சிறிலங்கா பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி இத்தகவலை வெளியிட்டார். அவர் தமது உரையில், 'வெடுக்குநாறி மலையில் காணப்படும் நினைவுச் சுவடுகள் பௌத்த மதத்திற்குரியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பொது ஆண்டுக்கு முன் (கி.மு) 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக் கல்வெட்டுகள் மூலம் அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள், அங்குள்ள தொல்பொருள் நிலப்பரப்பிற்குப் பெரும் சிதைவை ஏற்படுத்தியுள்ளன' எனக் குறிப்பிட்டார்.

மேலும், தொல்பொருள்களுக்குச் சேதம் விளைவிப்பது மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்களை எழுப்புவது தொடர்பாகத் தொல்பொருள் துறை ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வரலாற்றுச் சுவடுகளைச் சிதைப்பது கடுமையான சட்ட மீறலாகக் கருதப்படும் என்றும் அவர் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்தார். 'குறிப்பிட்ட அந்த இடத்தில் வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றாலும், தொல்பொருள்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வெடுக்குநாறி மலையைப் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியாக அறிவிப்பதற்கான வர்த்தமானி வெளியீடு மிக விரைவில் முன்னெடுக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பௌத்தத்தின் இருப்பை மறுத்தலும் சிங்களமயமாக்கலும்
சிறிலங்கா அமைச்சரின் இந்த அறிவிப்பின் பின்னணியில் ஈழத்தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் மிகப் பெரிய பேரினவாதச் சூழ்ச்சி மறைந்துள்ளது. இலங்கையில் 'பௌத்தம்' என்றாலே அது சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்ற புனைவைச் சிறிலங்கா அரசும் அதன் தொல்பொருள் திணைக்களமும் நெடுங்காலமாகக் கட்டமைத்து வருகின்றன.
ஆனால், பண்டைய காலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர்கள் பௌத்தத்தைப் பின்பற்றியுள்ளனர் என்பதற்குத் தமிழ் இலக்கியங்களும் வரலாற்று ஆவணங்களும் பெரும் சான்றுகளாக உள்ளன. ஆக, தமிழர் தாயகப் பகுதிகளில் தொன்மையான குகைகளோ அல்லது கல்வெட்டுகளோ காணப்பட்டால், அவை பண்டைய 'தமிழ்ப் பௌத்தத்தின்' சுவடுகளாகவே இருக்க முடியும்.
எனினும், 'தமிழ்ப் பௌத்தம்' என்ற வரலாற்று உண்மையையே முற்றாக மூடிமறைத்துவிட்டு, புத்த நெறி அடையாளங்கள் எங்கு அகப்பட்டாலும் அவற்றைச் 'சிங்களப் புத்த நெறிக்கு' உரியதாக உரிமை கொண்டாடும் தந்திரத்தையே அரசு செய்து வருகிறது. இதன்மூலம், தொல்பொருள்களைக் காரணம் காட்டித் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அங்குச் சிங்களக் குடியேற்றங்களை நிறுவிச் சிங்களமயமாக்கும் நுட்பமான உத்தியையே வெடுக்குநாறி மலையிலும் சிறிலங்கா அரசு கையாண்டுள்ளது.
ஈழத்தமிழர் நிலைப்பாடும் வரலாற்றுப் பின்னணியும்
சிறிலங்கா அமைச்சரின் இந்த அறிவிப்பானது ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்காலமாகத் தமிழர்கள் ஆதிசிவனை வழிபட்டு வரும் வெடுக்குநாறி மலையைத் தொல்பொருட் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றின் துணையுடன் அபகரித்து, அதனைச் சிங்கள பௌத்த மையமாக மாற்றும் சதித்திட்டம் பல ஆண்டுகளாகவே அரங்கேறி வருகிறது.
தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழிக்கும் நோக்கில், வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதிசிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் உள்ளிட்ட இறைவழிபாட்டுச் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுப் புதர்களில் வீசப்பட்ட நிகழ்வுகள் கடந்த காலங்களில் அரங்கேறின. இது தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் தமிழர்களால் வழக்குத் தொடரப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே நீதிமன்ற ஆணையின் படி மீண்டும் அங்குத் இறைவழிபாட்டுச் சிலைகள் நிறுவப்பட்டுத் தமிழர்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வருகின்றனர்.
மேலும், சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள் மீது சிறிலங்காக் காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டமையும், பலரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்து சித்திரவதை செய்தமையும் பின்னர் அவர்கள் நீதிமன்றங்களினால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


தமிழர்களின் வழிபாட்டு உரிமை
நீதிமன்றமே தமிழர்களின் வழிபாட்டு உரிமையை உறுதிசெய்துள்ள நிலையில், தற்போது அங்குத் தமிழர்களால் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுக் கட்டுமானங்களைச் 'சட்டத்திற்குப் புறம்பானவை' எனவும், 'தொல்பொருள்களைச் சிதைப்பவை' எனவும் அமைச்சர் முத்திரை குத்தியுள்ளார். இதன்மூலம் தமிழர்களின் தொன்ம அடையாளங்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு, அதனைப் புத்த நெறிக்குரிய புனிதத் தலமாக மாற்றுவதற்கே சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே தொல்பொருள் துறையையும், ஆணைச் சட்டங்களையும் கருவியாகப் பயன்படுத்தி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட சிறிலங்கா அரசு விரைந்து செயற்பட்டு வருகின்றமை ஈழத்தமிழர்களின் நிலவுரிமை மற்றும் வழிபாட்டுரிமை மீதான நேரடித் தாக்குதலாகவே நோக்கப்படுகின்றது.
