வியாழன், 26 மார்ச், 2026
|
தாயக செய்திகள்

வடக்கு கிழக்கின் மேலாண்மை இடைவெளி குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதி கலந்தாய்வு!

வடக்கு கிழக்கின் மேலாண்மை இடைவெளி குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதி கலந்தாய்வு!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மார்ச் 26, 2026 · 1 நிமிட வாசிப்பு

கடந்த ஒரு வார காலமாக வடக்கு கிழக்கில் தங்கியிருந்து சந்திப்புகளை மேற்கொண்டுவரும், இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு. மார்க் ஆண்ட்ரே பிரான்சுக்கும், தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ஃபொக்ஸ் (Fox) விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இன்று காலை 9.15 முதல் 10.15 வரை நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான திரு. செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண அவை அமைச்சருமான திரு. பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு. தருமலிங்கம் சுரேசு, அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த வழக்குரைஞருமான திரு. நடராசர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்சு ஆகியோருக்கு இடையிலான மற்றொரு சந்திப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை (24/03/2026) அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் அமையத்தில் (IOM) நடைபெற்றது.

இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் குமுகப் பொருளியல் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக மாகாண அவைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பெரும் மேலாண்மை இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பகிர்வு சிதைவடைந்து, மேலாண்மைக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தினார். மேலும், போருக்குப் பின்னரான வடக்கு கிழக்கின் பொருளியல் நிலையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்தும், இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லாச் சிக்கலுக்குத் தீர்வு காண அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் ஊடாக, அங்குள்ள வளங்களை முறையாகப் பயன்படுத்திப் பொருளியலைச் சீரமைப்பது குறித்தும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்தாயப்பட்டது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.