வியாழன், 21 மே, 2026
|

சீமானுக்குக் கொலை மிரட்டல்: இராமநாதன் அர்ச்சுனா மன்னிப்புக் கோர வேண்டும் - வேல்முருகன் சாடல்!

சீமானுக்குக் கொலை மிரட்டல்: இராமநாதன் அர்ச்சுனா மன்னிப்புக் கோர வேண்டும் - வேல்முருகன் சாடல்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 21, 2026 · 3 நிமிட வாசிப்பு

நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை, மொழி உரிமை, நில உரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தங்களுக்கான விடுதலைக்காக, எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப் பருவத்தையும், குடும்பங்களையும், கல்வியையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, வேலைவாய்ப்புப் பறிப்பு, நில அபகரிப்பு, படையினரின் அடக்குமுறை ஆகியவை தொடர்ந்து திணிக்கப்பட்டன. அமைதியாக உரிமை கேட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிற்றூர்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு வலயங்கள் கூடக் குண்டு mழையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.

உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டிருந்த கொத்துக் குண்டுகள், வேதியியல் குண்டுகள், பாசுபரசுக் குண்டுகள் போன்ற ஈவிரக்கமற்ற படைக்கலன்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டன. நமது தொப்புள்கொடி உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த இனப்படுகொலைக்குத் துணை நின்றன. இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளை முழுமையாக அகற்ற முடியாமல், அந்தக் குண்டுகளோடும் வலிகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர். உயிரோடு இருக்கும்போதே தமிழர்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன; கைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுச் சிதைக்கப்பட்டார்கள். பச்சிளம் குழந்தைகள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். கருவுற்ற பெண்கள் கூட இரக்கின்றிக் கத்திகளால் கிழித்துக் கொல்லப்பட்டார்கள். மனித இனமே தலைகுனிய வேண்டிய கொடுமைகள் ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்டன.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17, 18 ஆகிய நாள்களில், முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலயங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளே நூறாயிரக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்துச் செய்யப்பட்ட இனப்படுகொலை, தமிழின வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒன்றாகும். ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான நமது தொப்புள்கொடி உறவுகள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். தங்களின் தாய் நிலத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெளியேறிய உறவுகள் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியப் பெருநிலத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு ஏதிலியர் முகாம்களில் நமது தொப்புள்கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அத்தனைக் கொடுமைகளும் உடன்பிறப்புகளின் போர்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலுமே நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது. தமிழர்களைத் தமிழர்களுக்கே எதிராக நிறுத்திய அரசியல் சூழ்ச்சிகளே தமிழினத்தின் அழிவை விரைவுபடுத்தின. இன்றும் அதே வேலையைச் செய்யச் சில ஆற்றல்கள் துடிக்கின்றன. தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க, தமிழர்களையே கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்த் தேசிய அரசியல் வளர்ச்சி நிலைக்கு வருவதை விரும்பாத, அதை ஏற்றுக்கொள்ள முடியாத பின்புலத்தோடு இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்களைப் பயன்படுத்தி இப்படியான பிளவுபடுத்தும் அரசியல் நடத்தப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. ஒருபோதும் தமிழினம் இப்படியான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இன ஒற்றுமையைச் சிதைக்கும் எந்தப் பேச்சும், எந்த அரசியலும், எந்தத் தூண்டுதலும், தமிழர் வரலாற்றின் வலியை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆபத்தான செயலாகும். இந்தச் சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அண்மையில் தமிழ்நாட்டிலும் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கும் பேச்சுக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைக் குறிவைத்து, தன்னிடம் படைக்கலம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன் எனவும், ஒருமையில் தரக்குறைவாகவும் பேசியிருப்பது அரசியல் நாகரிகத்திற்கும் மக்களாட்சி மரபுகளுக்கும் முற்றிலும் எதிரானது. ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், இன்னொரு நாட்டின் அரசியல் கட்சித் தலைவரைக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது சாதாரணமானதல்ல. இதனைச் சம்பந்தப்பட்ட அரசுகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன என்றால், அது தமிழர்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலையையும் mதிக்காத அணுகுமுறையாகவே பார்க்கிறோம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும், மக்களாட்சி ஆற்றல்களும் இராமநாதன் அர்ச்சுனாவின் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அவர் உடனடியாகத் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேண்டும். தமிழர் இனம் தனது விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்ததற்கான முதன்மைக் கரணியம் உடன்பிறப்புகளின் துரோகமும், ஒற்றுமையின்மையுமே என்பதனை இந்த நேரத்தில் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்வதாகவும், இன ஒற்றுமையே தமிழர் இனத்தின் பாதுகாப்பு என்பதனால் அதனைக் காப்பது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பொறுப்பு எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.