தமிழக சட்டமன்றத் தேர்தல் காலையிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணிவரையிலான நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணிக்கு 13.80 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இவ்வாண்டு அதனைவிட 3.89 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 78.12 சதவீத வாக்குகள் பதிவானமையே அதிகபட்ச வாக்குப்பதிவாக உள்ளது. இந்நிலையில், இவ்வாண்டு வாக்குப்பதிவு அந்தச் சாதனையை முறியடித்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (SIR) தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து 74.07 இலட்சம் பேர் நீக்கப்பட்டனர். இச்சூழலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதற்கு இதுவே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்கத்திலும் காலை 9 மணி நிலவரப்படி 18.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அண்மையில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
