பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இந்தத் தாக்குதல் நடவடிக்கை இப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகரக் காவல்படை இன்று புதன்கிழமை (22) காலை இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வணிக நடவடிக்கை மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் வேளையில், ஈரானியத் துப்பாக்கிப் படகானது தொடர்புடைய கொள்கலன் கப்பலுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் வழங்காமல் தாக்குதல் நடத்தியதாக அம்மையம் மேலும் கூறியுள்ளது.
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர்நிறுத்தத்தைக் ‘காலவரையின்றி’ நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த வார இறுதியில் ஈரானியக் கொள்கலன் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படையினர் தாக்கிப் கைப்பற்றினர். அத்துடன் இந்தியப் பெருங்கடலில் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா சோதனையிட்டதற்கும் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இன்று ஈரானால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கொள்கலன் கப்பலின் மேல்தளம் சேதமடைந்ததாகவும், எனினும் நல்வாய்ப்பாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கப்பல் தொடர்பான மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ட்ரம்ப் அறிவித்த போர்நிறுத்த நீட்டிப்பு குறித்து ஈரான் இதுவரை அலுவல்முறையாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் போரைத் தொடங்க இரு நாடுகளும் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளன.
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மீது தங்களுக்குள்ள இறையாண்மையை “சட்டப்பூர்வமாக நிலைநாட்டியுள்ளதாக” ஈரானின் ஃபார்ஸ் (Fars) ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.