புதன், 15 ஏப்ரல், 2026
|
பன்னாடு

240 ஈரானிய கடற்படையினர் தாயகம் திரும்பினர்: இலங்கையிலிருந்து சிறப்பு வானூர்தியில் பயணம்!

240 ஈரானிய கடற்படையினர் தாயகம் திரும்பினர்: இலங்கையிலிருந்து சிறப்பு வானூர்தியில் பயணம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 15, 2026 · 1 நிமிட வாசிப்பு

கடந்த மாதம் இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே நடந்த கடற்படை மோதலைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்பில் இருந்துவந்த 240 ஈரானிய மாலுமிகள் நேற்றையதினம் சிறப்பு வானூர்தி மூலம் பாதுகாப்பாகத் தமது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க - ஈரான் மோதலின் போது, இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானின் ‘ஐரிசு டெனா’ (IRIS Dena) போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிசு பூசேர்’ (IRIS Bushehr) கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு ஈரானுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பன்னாட்டுச் கடல்சார் கடமைகளுக்கு அமைய, மனிதநேய அடிப்படையில் இந்த 240 ஈரானியக் கடற்படையினருக்கு இலங்கை அரசு தங்குமிடம் அளித்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக இணக்கப்பாட்டின் அடிப்படையில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவர்கள் தற்போது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலைப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர், ஓய்வுபெற்ற படைத்தளபதி அருண செயசேகரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மாலுமிகள் குழுவினர் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்கப் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து சிறப்புத் துருக்கிய வானூர்தி (Turkish Airlines) மூலம் ஈரானை நோக்கிப் புறப்பட்டதாக இலங்கை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.