லெபனான் ஊடகவியலாளர் படுகொலை - இசுரேல் மீது விசாரணை நடத்த ஐ.நா வல்லுனர்கள் கோரிக்கை !
கடந்த வாரம் இசுரேலால் மூன்று லெபனான் செய்தியாளர்கள் கொல்லப்பட்டமை குறித்து முழுமையான, சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மூன்று ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைக் கருத்துரிமை மீதான இசுரேலியப் படைகளின் மற்றுமொரு தாக்குதல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச்சு 28 ஆம் நாள், அல் மாயாதீன் (Al Mayadeen) செய்தியாளர் பாத்திமா ப்தூனி, அவரது உடன்பிறந்தவரும் ஒளிப்பதிவாளருமான முகம்மது ப்தூனி மற்றும் அல் மனார் (Al Manar) தொலைக்காட்சிச் செய்தியாளர் அலி சுவைப் ஆகியோர் தெற்கு லெபனானில் செய்தி சேகரிக்கும் பணிக்காகச் சென்றுகொண்டிருந்த போது இசுரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
"ஆயுதப் போர்களின் போது தமது தொழில்சார் கடமைகளைச் செய்யும் செய்தியாளர்கள் பொதுமக்களே ஆவர். அவர்கள் இலக்கு வைக்கப்படவோ அல்லது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவோ கூடாது" என ஐரீன் கான், மோரிசு டிட்பால்-பின்சு மற்றும் பென் சவுல் ஆகியோர் தெரிவித்தனர்.
"போரில் நேரடியாகப் பங்கேற்காத செய்தியாளர்களைத் திட்டமிட்டுக் கொல்வது, பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் கடுமையான மீறலாகும்; இது ஒரு போர்க்குற்றமும் ஆகும்" என அவர்கள் தொடர்ந்தனர்.
அலி சுவைப்பை ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் (Hezbollah) போராளி என இசுரேல் குற்றம் சாட்டியது. எனினும், இந்தக் கொலையை நியாயப்படுத்துவதற்காகத் தம்மால் வெளியிடப்பட்ட படம் போலியாகத் திருத்தப்பட்டது (Photoshopped) என்பதை இசுரேல் பின்னர் ஒப்புக்கொண்டது. இதனைப் "பன்னாட்டுச் சட்டத்தின் மீதான இசுரேலின் வெளிப்படையான அவமதிப்பு" என ஐ.நா. வல்லுநர்கள் சாடியுள்ளனர்.
"செய்தியாளர்களை இலக்கு வைத்துக் கொல்வதும், பின்னர் எவ்வித நம்பகமான சான்றுகளுமின்றி அவர்கள் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறுவதும் இசுரேலின் வழக்கமான, ஏதமுள்ள செயலாக மாறியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதக் குழுவொன்றுடன் தொடர்புடைய ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவது என்பது, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தின் கீழ், செய்தியாளர்கள் நேரடியாகப் போரில் பங்கேற்பதாகப் பொருளாகாது என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"இசுரேலிய அலுவலர்கள் இதனை அறிந்திருந்தும், அதைப் புறக்கணிக்கவே முனைகின்றனர். லெபனான், காசா மற்றும் மேற்குக்கரை ஆகிய பகுதிகளில் செய்தியாளர்களைக் கொன்றமைக்காக எவ்விதத் தண்டனையும் பெறாத துணிச்சலே இதற்குக் காரணமாகும்" என அவர்கள் கூறினர்.
2023 ஆம் ஆண்டிலிருந்து காசாவில் 210 பாலத்தீனச் செய்தியாளர்கள் மற்றும் லெபனானில் 14 செய்தியாளர்கள் உட்படக் குறைந்தது 259 செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களை இசுரேல் கொன்றுள்ளது.
"காசாவில் செய்ததைப் போலவே, லெபனானில் இசுரேல் தற்போது மேற்கொண்டு வரும் படைத்துறைத் தாக்குதல்கள் குறித்த செய்திகளை இருட்டடிப்புச் செய்யவும், போர்க்குற்றங்கள் தொடர்பான செய்தி வெளியீடுகளை முடக்கவுமே செய்தியாளர்களை இசுரேல் இலக்கு வைத்துக் கொல்கிறது. இது இசுரேலின் அருவருக்கத்தக்கச் செயலாகும்" என ஐ.நா. வல்லுநர்கள் தெரிவித்தனர்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடந்த செய்தியாளர் கொலைகளில் மூன்றில் இரண்டு பங்கு கொலைகளுக்கு இசுரேலே காரணம் எனச் 'செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு' (CPJ) கடந்த பிப்பிரவரி திங்களில் கண்டறிந்தது.
லெபனான் "இலக்கு வைக்கப்படக் கூடாத பொதுமக்களான செய்தியாளர்களுக்கு மேன்மேலும் உயிரைப் பறிக்கும் பகுதியாக மாறியுள்ளது" என்று அக்குழுவின் நடுவண் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான வட்டார இயக்குநர் சாரா குடா தெரிவித்தார்.
"இந்தப் போர் மற்றும் இதற்கு முந்தைய பத்தாண்டுகளில், எவ்வித நம்பகமான சான்றுகளும் இன்றிச் செய்தியாளர்களைப் போராளிகள் என்றும் கொடுஞ்செயல் புரிபவர்கள் என்றும் இசுரேல் குற்றம் சாட்டும் கவலையளிக்கும் போக்கை நாங்கள் கண்டுள்ளோம். அவர்கள் எந்த ஊடகத்திற்காகப் பணியாற்றினாலும், செய்தியாளர்கள் தாக்குதலுக்குரிய இலக்குகள் அல்லர்" என அவர் தொடர்ந்தார்.
கடந்த மார்ச்சு திங்கள் தொடக்கத்திலிருந்து லெபனான் முழுவதும் இசுரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,345 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,040 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனான் நலவாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இசுரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பின்னர், செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் பரவலாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்கள் மீதான கொலைகள் மற்றும் தாக்குதல்கள், ஊடகக் கட்டமைப்புகள் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இப்பகுதியிலும் உலகளாவிய அளவிலும் செய்தி சேகரிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்த பல நிகழ்வுகளைச் 'செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு' பதிவு செய்துள்ளது.