ஈரானின் 10 அம்ச போர்நிறுத்தத் திட்டம் என்றால் என்ன? அமெரிக்கா இதற்குச் சம்மதிக்குமா?
பாகிஸ்தான் தலைவர்களுடன் டொனால்ட் டிரம்ப் பேசியதைத் தொடர்ந்து, இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரான் (ஈரான்) மீது அழுத்தம் கொடுப்பதில் சீனாவின் பங்களிப்பும் இருப்பதாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையை(Strait of Hormuz) மீண்டும் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று, ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கான டொனால்ட் டிரம்பின் காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, இரு நாடுகளும் இந்த இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்தன. இதற்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணையை தற்காலிகமாகத் திறந்துவிட ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
இஸ்ரேலும் இந்த போர்நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானின் 10 அம்சத் திட்டம் "பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தக்கூடிய ஒரு அடிப்படை" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் 10 அம்சத் திட்டத்தில் உள்ள கோரிக்கைகள் என்ன?
பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் வெள்ளை மாளிகையிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:
ஈரான் மீதான அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்க வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டை ஈரான் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.
மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்.
ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.
எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானம் மூலம் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.
ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட பார்சி மொழிப் பிரதியில் "அணுசக்தி செறிவூட்டலை அங்கீகரித்தல்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆங்கிலப் பிரதியில் அது விடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணை குறித்து திட்டம் கூறுவது என்ன?
ஈரானிய இராணுவ மேலாண்மையின் கீழ் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார். இந்தத் திட்டத்தின்படி, நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ஈரான் மற்றும் ஓமான் இணைந்து ஒரு கப்பலுக்கு 2 மில்லியன்டொலர்வரை கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை ஈரான் தனது நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நீரிணையைமீண்டும் மூட தெஹ்ரான் திட்டமிடலாம்.
அமெரிக்கா இதற்குச் சம்மதிக்குமா?
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் நிலை குறித்து டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது. எனினும், இரு தரப்பினரின் முற்றிலும் மாறுபட்ட கோரிக்கைகளும், விட்டுக் கொடுப்பதில் உள்ள எல்லைகளும் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தடையாக உள்ளன.
குறிப்பாக, மோதல் தொடங்குவதற்கு முன்பு ஹோர்முஸ் , நீரிணையின் (Strait of Hormuz) மீது ஈரானுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், தற்போது அதன் மீது தங்களுக்குக் கட்டுப்பாடு வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கை மிகுந்த கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த கருத்துக்கள் குறித்து ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி CNN ஊடகத்திடம் கூறுகையில், "இதில் எதெல்லாம் உண்மை என்று யாருக்குத் தெரியும்? ஆனால், இந்த ஒப்பந்தம் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரானுக்கு உரிமை வழங்கினால், அது உலகிற்கே ஒரு பேரழிவாக (Cataclysmic) அமையும்," என்று தெரிவித்தார்.
டிரம்ப் இது குறித்து நேரடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், "ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய அமெரிக்கா உதவும்," என்று மட்டும் கூறினார். ஈரானின் இந்தக் கடுமையான கோரிக்கைகளை அமெரிக்கா அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றும், இவை பேச்சுவார்த்தைக்கான ஒரு தொடக்கப் புள்ளியாகவே அமையும் என்றும் நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பட்ட கோரிக்கைகள் ஒரு நிரந்தர ஒப்பந்தத்திற்குத் தடையாக உள்ளன. குறிப்பாக, போருக்கு முன்பு நீரிணை மீது ஈரானுக்குக் கட்டுப்பாடு இல்லாத நிலையில், தற்போது அதைக் கோருவது உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த ஒப்பந்தம் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டை ஈரானுக்கு வழங்கினால், அது உலகிற்குப் பேரழிவாக அமையும்" என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி எச்சரித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் இணைந்துள்ளதா?
ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் முன்னதாகக் கூறுகையில், "லெபனான் உட்பட அனைத்து இடங்களுக்கும்" இந்த போர்நிறுத்தம் பொருந்தும் என்று தெரிவித்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ஈரான் இனி ஒரு அணுசக்தி, ஏவுகணை அல்லது "பயங்கரவாத" அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதை அடுத்து, லெபனான் இந்தப் போருக்குள் இழுக்கப்பட்டது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் சந்திக்க வருமாறு ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்களுக்கு 'X' தளத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டிரம்ப் தனது காலக்கெடுவை நிறுத்துவதற்கு முந்தைய மணிநேரங்களில் நடந்தது என்ன?
செவ்வாய்க்கிழமை இரவு, இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க ஏதுவாக தனது காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் டிரம்பை வலியுறுத்தினார். அதேபோல்,ஹோர்முஸ் நீரிணையை இரண்டு வாரங்களுக்குத் திறந்துவிடுமாறு ஈரானையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனா, பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைய போர்நிறுத்தத்திற்கு வழி காணுமாறு ஈரானை ஊக்குவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வர சீனா உதவியதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
அமெரிக்க இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், டிரம்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தப் போரை எதிர்ப்பதுடன், பெட்ரோல் விலை உயர்வால் கடும் அதிருப்தியில் இருப்பதும் கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.