இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், இன்று (27) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் தன்னை அதிகாரப்பூர்வமாகச் சட்டத்தரணியாகப் பதிவு செய்துகொண்டார்.
சிறை முதல் நீதிமன்றம் வரை (கல்வி மற்றும் பதிவு)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் இருந்த காலத்தில், பேரறிவாளன் இளமானி, முதுமானி மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தார். உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டு சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பேரறிவாளன் உட்பட மொத்தம் 1,248 பேர் சட்டத்தரணிகளாகப் பதிவு செய்துகொண்டனர். புதிய சட்டத்தரணிகள் பதிவுக் குழுவின் தலைவரும் சங்க உறுப்பினருமான கே. பாலு உறுதிமொழியை வாசிக்க, அதனை ஏற்றுப் பேரறிவாளன் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீதிக்காகப் போராடிய அதே நீதிமன்றத்தில் களமிறக்கம்
கடந்த மூன்று தசாப்தங்களாகத் தனக்கான நீதிக்காகக் காவலர்கள் புடைசூழ எந்த நீதிமன்றத்தின் படிகளில் ஏறி இறங்கினாரோ, அதே சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் இன்று சட்டத்தரணியாகக் களமிறங்கியுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கின் பின்னணியும் விடுதலையும்
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் (ஸ்ரீபெரும்புதூர்) நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கு இரண்டு 9 வோல்ட் மின்கலங்களை (Batteries) வாங்கிக் கொடுத்தார் என்பதே பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட பிரதான குற்றச்சாட்டாகும்.
நிகழ்வின் போது 19 வயதாக இருந்த பேரறிவாளன், 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
எனினும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) அதிகாரி தியாகராஜன், "அந்த மின்கலங்கள் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியாது" எனப் பேரறிவாளன் கூறியதை வாக்குமூலத்தில் பதிவு செய்யத் தவறிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சுமார் 31 ஆண்டுகாலச் சிறைவாசத்திற்குப் பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பேரறிவாளன் உள்ளிட்டோரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.